நேபாள நாட்டின் தலைநகர் காட்மாண்டுவில் சனிக்கிழமையன்று காலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி, லக்னோ உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களிலும் கொல்கத்தா போன்ற பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தால் அதிர்வு ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் நேபாளத்தில் பல இடங்களில் கட்டடங்கள் இடிந்துள்ளன. ராஞ்சி, ஜெய்ப்பூர், கௌஹாத்தி, உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் இந்த அதிர்வு உணரப்பட்டது. சிக்கிம், பிஹார் மாநிலங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 7.7ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டுவில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
சாலைகள் பல இடங்களில் விரிசல் கண்டிருக்கின்றன. இதுவரை உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.
உள்ளூர் நேரப்படி காலை 11.56க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காட்மண்டுவிலிருந்து வடமேற்கில் 83 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக காட்மாண்டு விமானநிலையம் மூடப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் 6.2 அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இதன் பாதிப்பும் நேபாளத்திலும் வட இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டது.
இதற்கிடையில், சிக்கிம், பிஹார் மாநில முதல்வர்களுடன் இந்தியப் பிரதமர் மோதி இந்த நிலநடுக்கம் குறித்துப் பேசினார்.
இந்த நிலநடுக்கம் தொடர்பான தகவல்களை அதிகாரிகள் சேகரித்துவருவதாக, பிரதமர் மோதி, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் பிரதமர் சுஷில் கொய்ராலா, தற்போது வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கிறார். நேபாளத்தின் ஜனாதிபதி ராம் பரண் யாதவிடம் நரேந்திர மோதி இந்த நில நடுக்கம் குறித்துப் பேசியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.