1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2020 (15:18 IST)

சிந்து சமவெளி நாகரிக மக்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்களா? பானை எச்சங்கள் காட்டும் ஆய்வு முடிவு

சிந்துச் சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் மாடு, எருமை, ஆடு ஆகியவற்றின் மாமிசத்தை பெருமளவில் உணவாக உட்கொண்டிருக்கலாம் என சமீபத்தில்  வெளியான ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. சிந்துச் சமவெளி பிரதேசங்களில் கிடைத்த பானைகளில் இருந்த உணவு எச்சங்களை ஆராய்ந்ததில் இந்த முடிவு  எட்டப்பட்டுள்ளது.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சித் துறையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவரும் தற்போது ஃப்ரான்சில் உள்ள CEPAMல் டாக்டர்  பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருப்பவருமான அக்ஷயேதா சூர்யநாராயண், சிந்து சமவெளி மக்களின் உணவுப் பழக்கம் குறித்து ஆய்வு  மேற்கொண்டார். இந்த ஆய்வின் முடிவு Lipid residues in pottery from the Indus Civilisation in northwest India என்ற  தலைப்பில் தற்போது Journal of Archaeological Science என்ற சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.
 
"சிந்துச் சமவெளியில் வாழ்ந்த மக்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவந்தாலும், அங்கு வாழ்ந்த மக்கள் என்னவிதமான உணவை உண்டார்கள்  என்ற கேள்வியெழும்போது, அங்கு என்ன பயிர்கள் விளைந்தன என்ற அடிப்படையிலேயே இந்த விவாதங்கள் நடந்துவந்தன.
 
ஆனால், அங்கு விளைந்த பயிர்கள், அங்கிருந்த விலங்குகள், அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் ஆகியவற்றை கொண்டு ஒரு முழுமையான ஆய்வை மேற்கொண்டால் மட்டுமே, அவர்களது உணவுப் பழக்கவழக்கம் குறித்த முழுமையான சித்திரத்தைப் பெற முடியும்" என்ற அடிப்படையில் இந்த ஆய்வு  மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
பழங்கால மக்கள் பயன்படுத்திய செராமிக் பாத்திரங்களில் எஞ்சியிருந்து கிடைக்கக்கூடிய கொழுப்பின் எச்சங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம், அந்த பாத்திரங்களைப் பயன்படுத்திய மக்கள் எவ்விதமான உணவை உட்கொண்டார்கள் என்பதை அறிய முடியும்.
 
இது போன்ற ஆய்வுகள் தொல்லியலாளர்களால் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோன்ற ஒரு ஆய்வே, தற்போது சிந்துச் சமவெளி  நாகரிகப் பகுதிகளில் கிடைத்த பானை ஓடுகளை வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
சிந்து சமவெளி நாகரிகத்தில் விளைந்த பயிர்கள்
சிந்து சமவெளி பகுதியில் பார்லி, கோதுமை, அரிசி, ஓட்ஸ், கொண்டைக்கடலை, பட்டாணி போன்றவை விளைவிக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர, எள் போன்ற எண்ணெய் வித்துக்கள், திராட்சை, வெள்ளரி, கத்திரிக்காய், மஞ்சள், கடுகு, சணல், பருத்தி போன்றவையும் பயிரிடப்பட்டுள்ளன.
 
விலங்குகளைப் பொறுத்தவரை, மாடு மற்றும் எருமைகள் பெருமளவில் வளர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இங்கு கிடைத்த விலங்குகளின் எலும்புகளில்  பெருமளவிலானவை அதாவது 50 - 60 சதவீத எலும்புகள் மாடுகள், எருமைகளுடையவை. 10 சதவீத எலும்புகள் ஆடுகளுடையவை. இதன் மூலம், சிந்து  சமவெளியில் வசித்த மக்கள் மாட்டிறைச்சியை விருப்ப உணவாகக் கொண்டிருக்கக்கூடும். இதற்கு அடுத்த நிலையில், ஆட்டிறைச்சி அவர்களது உணவுத் தேர்வாக  இருந்திருக்கலாம்.
 
மாடுகளைப் பொறுத்தவரை 3 - 3.5 ஆண்டுகள் வரை வளர்க்கப்பட்டுள்ளன. பசுக்கள் பாலைப் பெறுவதற்காகவும் காளைகள், பிற வேலைகளைச் செய்யவும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. பன்றியின் எலும்புகள் கிடைத்தாலும், அவற்றின் பிற தேவை என்ன என்பது முழுமையாகத் தெரியவில்லை. இவை தவிர, மான்,  பறவைகள் போன்றவற்றின் எலும்புகளும் சிறிய அளவில் கிடைத்திருக்கின்றன.

பானை ஓடுகள் எப்படி சேகரிக்கப்பட்டன?
 
இந்த ஆய்வுக்காக வடமேற்கு இந்தியாவில், அதாவது தற்போதைய ஹரியானாவில் உள்ள சிந்து சமவெளி அகழாய்வுத் தலமான ராகிகடியை ஒட்டியுள்ள ஆலம்கிர்பூர், மாசூத்பூர், லோஹரி ரகோ, கானக், ஃபர்மானா போன்ற சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்த பல்வேறு இடங்களில் இருந்து செராமிக் பாத்திரங்கள்  சேகரிக்கப்பட்டன. இதில் சிந்துச் சமவெளியின் கிராமப்புறங்களும் நகர்ப்புறங்களும் அடங்கும்.
 
ஒட்டுமொத்தமாக 172 பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டன. இந்த சேகரிப்பின்போது, பாத்திரங்களின் விளிம்புகள் குறிப்பாக கவனிக்கப்பட்டன. உணவுப் பொருட்களைக்  கொதிக்கவைக்கும்போது, அவை விளிம்புகளில் சேர்ந்திருக்கலாம் என்பதால் அவற்றுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டது.
 
பிறகு, இந்தப் பானை ஓடுகள் 2-5 மி.மீ. அளவுக்கு ட்ரில் செய்யப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பானை ஓடுகளை ஒட்டியுள்ள படிமங்களும் சேகரிக்கப்பட்டன.  பிறகு, இந்த மாதிரிகளில் இருந்து கொழுப்புப் புரதங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
 
இதன் மூலம் அந்த பானையில் வைக்கப்பட்டிருந்தது தாவரம் சார்ந்த உணவுப் பொருளா அல்லது இறைச்சியா என்பதைக் கண்டறிய முடியும். அதற்குப் பிறகு  அதிலிருந்த கொழுப்பு அமிலங்களை ஐசோடோப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதன் மூலம், அவை எந்த விலங்கின் இறைச்சியைச் சேர்ந்தவை என்பதை  ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
 
ஆய்வின் முடிவு
 
இந்த ஆய்வின் முடிவில், இந்த பானைகளில் பால் பொருட்கள், அசைபோடும் விலங்குகளின் இறைச்சி, தாவரங்கள் ஆகியவை சமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.  கிராமப் புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வித்தியாசமின்றி பாத்திரங்களின் பயன்பாடு இருந்தது. தவிர, இந்தப் பாத்திரங்கள் பல்வேறு பணிகளுக்கும்  பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
 
இந்தப் பகுதியில் பெரிய அளவில் அசைபோடும் பாலூட்டிகள் இருந்திருந்தாலும், பால் பொருட்கள் இந்தப் பாத்திரங்களில் நேரடியாகப் பயன்படுத்தப்பட்டது மிகக்  குறைவாகவே இருக்கிறது. ஆனால், இதற்கு முன்பாக குஜராத்தில் கிடைத்த பானை ஓடுகளை ஆய்வுசெய்தபோது, அவற்றில் பெருமளவு பால் பொருட்கள்  பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது (இது தொடர்பான ஆய்வு முடிவு Scientific Reportsல் வெளியானது).
 
அடுத்தகட்டமாக, வெவ்வேறு கலாச்சார பின்புலத்திலும் வெவ்வேறு காலநிலைகளிலும் உணவுப் பழக்கத்தில் எப்படி மாற்றங்கள் நிகழ்ந்த என்பதைக் கண்டறியும் ஆய்வுகளை மேற்கொள்ளலாம்; ஆனால், அதற்கு சரியாக காலம் நிர்ணயிக்கப்பட்ட பானை ஓடுகள் தேவைப்படும் எனக் குறிப்பிடுகிறார் அக்ஷயேதா சூர்யநாராயண்.
 
மேலும், தெற்காசியப் பகுதிகளில் இப்படிக் கிடைக்கும் உயிர்ம எச்சங்களை ஆய்வுக்குட்படுத்தி, அகழாய்வில் கிடைக்கும் பிற உயிர்மப் பொருட்களையும் வைத்து,  வரலாற்றுக்கு முந்தைய தெற்காசிய உணவுப் பழக்க வழக்கத்தின் பன்மைத்துவத்தை நாம் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் அக்ஷயேதா.
 
சிந்துச் சமவெளி நாகரிகம் குறித்த சில குறிப்புகள்
 
தன்னுடைய ஆய்வில் சிந்துச் சமவெளி நாகரிகம் கூறித்த சில பின்னணித் தகவல்களையும் தந்திருக்கிறார் அக்ஷயேதா. சிந்துவெளி நாகரிகம் என்பது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் உருவான மிகச் சிக்கலான அமைப்புகளை உடைய நாகரிகங்களில் ஒன்று. தற்போதைய பாகிஸ்தான், வடமேற்கு இந்தியா, மேற்கு இந்தியா, ஆஃப்கானிஸ்தான் பகுதிகளில் இந்த நாகரிகம் பரவியிருந்தது.
 
சமவெளிப் பிரதேசம், மலையடிவாரம், பாலைவனங்கள், புதர்க்காடுகள், கடற்கரைகள் என் பல்வேறுவிதமான நிலப்பகுதிகளில் இந்த நாகரிகம் விரிந்து பரந்திருந்தது.  கி.மு. 2600க்கும் கி.மு. 1900க்கும் மத்தியில் அதாவது முதிர்ந்த ஹரப்பா நாகரிக காலகட்டத்தில் நகரங்கள் என்று சொல்லக்கூடிய அளவிலான ஐந்து பெரிய  குடியிருப்புகள் உருவாயின. இது தவிர, சிறு சிறு குடியிருப்புப் பகுதிகளும் ஏற்பட்டன.
 
மணிகள், வளையல்கள், எடை கருவிகள், முத்திரைகள் போன்றவை சிந்துவெளி நாகரிக காலத்தின் மிக முக்கியமான அடையாளங்களாகப் பார்க்கப்படுகின்றன.  பண்டமாற்றுக்கான மிகப் பரந்த வலையமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. மிக மதிப்பு வாய்ந்த பொருட்கள்கூட கிராமப்புறங்களில் கிடைக்கும் அளவுக்கு இந்த  வலைப்பின்னல் உருவாக்கப்பட்டிருந்தது.
 
சிந்துச் சமவெளி நாகரிக காலத்தில், நகர்ப்புற பகுதிகள் கிராமப்புறங்களின் மீது ஆதிக்கம் செலுத்தின என்று சொல்லமுடியாது. இவற்றுக்கு இடையிலான உறவு பெரிதும் பொருளாதாரம் சார்ந்தே இருந்தது.
 
ஆனால், கி.மு. 2100க்குப் பிறகு, சிந்துச் சமவெளியின் மேற்குப் பகுதி மெல்லமெல்ல கைவிடப்படலாயிற்று. மாறாக கிழக்குப் பகுதியில், குடியிருப்புகள் எழ ஆரம்பித்தன. சிந்துச் சமவெளியின் நகர நாகரிகத்திற்கே உரிய சிறப்பம்சங்களான எழுத்துகள், முத்திரைகள், எடை கருவிகள் ஆகியவை இந்தப் பிற்கால ஹரப்பா நாகரிக காலத்தில் காணப்படவில்லை.
 
சிந்துச் சமவெளியின் நகர்ப்புற தன்மை மாறி, இந்த காலகட்டத்தில் கிராமப்புறம் சார்ந்த குடியிருப்புகளே அதிகம் உருவாயின. இதற்குப் பல்வேறு காரணங்கள்  சொல்லப்பட்டாலும், பருவமழை பொய்த்துப் போனதே மிக முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. கி.மு. 2150ல் துவங்கி, பல நூற்றாண்டுகளுக்கு இந்த நிலை  நீடித்தது.