இந்திய குடும்பங்களில் தீபாவளி என்பது பிரிக்க முடியாத ஒரு பண்டிகையாக மாறிவிட்டது. தீபாவளியன்று தென்னிந்திய உணவு முறைகளுக்கும் வடஇந்திய உணவு முறைகளுக்கும் இடையே வித்தியாசங்கள் உள்ளன' என்கின்றனர் ஆர்வலர்கள். அப்படியென்ன வித்தியாசம்?
தீபாவளி என்றாலே புத்தாடையும் பலகாரங்களும்தான் நினைவுக்கு வரும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதற்குப் பல்வேறு புராணகால உதாரணங்களும் கூறப்படுகின்றன. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் நரகாசுரனை, கிருஷ்ணன் வதம் செய்த நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
அதேநேரம், வட இந்தியாவை பொறுத்தவரையில் வனவாசத்தை முடித்துக் கொண்டு அயோத்தியில் ராமர் கால்வைத்த நாளன்று தீப விளக்குகளால் வீடுகளை அலங்கரித்துக் கொண்டாடியதை தீபாவளியாக கொண்டாடுவதாகவும் கூறப்படுகிறது.
தவிர, சமணர்களை பொறுத்தவரையில் மகாவீரர் மோட்சம் அடைந்த நாள் மற்றும் சீக்கியர்களின் குருவான குருநானக் பிறந்தநாள் ஆகியவற்றை தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர். இதுதவிர, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இட்லியும் ஆட்டுக்கறியும்
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் முடிந்தவுடன் புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பது என்பது வழக்கமாக உள்ளது. இதன்பின்னர், வீட்டில் செய்த பலகாரங்களை உறவினர்களுக்கும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கொடுத்து மகிழ்கின்றனர். இதன்பின்னர், காலை உணவாக இட்லி, ஆட்டுக்கறி குழம்பும் வழக்கமான ஒன்றாக உள்ளது. தென்மாவட்டங்களிலும் ஆட்டுக்கறி குழம்பு, மீன் வகைகளை எடுத்துக் கொள்கின்றனர்.
"வட இந்தியாவை பொறுத்தவரையில் தீபாவளி என்பதை அம்மனுக்கு உகந்ததாக பார்க்கின்றனர். அன்றைக்குப் பெரும்பாலான குடும்பங்களில் அசைவ உணவு என்பது கிடையாது. அவர்கள் லட்சுமி பூஜையோடு சேர்த்து ராமர் அயோத்திக்கு திரும்பிய நாளாக அன்றைய தினத்தைப் பார்க்கின்றனர். ராமர், அயோத்தியில் நுழைந்த நாளன்று லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டன. அதன் வெளிப்பாடாக தீப ஒளியேற்றிக் கொண்டாடுகின்றனர்.
நமது ஊரில் தீபாவளி என்பது நரகாசுர வதமாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம், மேற்கு வங்காளம், அசாம் போன்ற கிழக்கு மாகாணங்களில் தீபாவளியன்று ஆட்டுக் கறி, கோழி, மீன் வகைகளை எடுத்துக் கொள்கின்றனர்" என்கிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி.பாலச்சந்திரன். இவர் மேற்கு வங்க மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்தவர்.
எண்ணெய் குளியல் எதற்காக?
"தென்னிந்தியாவில் இறந்து போன முன்னோர்களுக்கு சடங்குகளை செய்த பிறகு எண்ணெய் குளியல் நடத்துவது என்பது வழக்கமாக உள்ளது. அதாவது, துக்கத்தை அனுசரிக்கும் வழக்கத்துக்காகவே எண்ணெய் குளியல் எடுக்கப்படுகிறது. அதேநேரம், வடஇந்தியாவில் எண்ணெய் குளியல் இருப்பது போலத் தெரியவில்லை. கிழக்கு மாகாணங்களான மேற்கு வங்கம், அசாமில் காளி பூஜை என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். மகிஷாசுரனை காளி வதம் செய்த புராண கதையின் அடிப்படையில் கொண்டாடுகின்றனர். அந்தவகையில், தீபாவளி என்பது அனைத்து ஊர்களுக்கும் பொதுவான ஒன்றாக இல்லை.
வடஇந்தியாவில் தீபாவளியன்று தீப ஒளி இருக்கும். கிழக்கு மாகாணங்களில் பட்டாசுகளை வெடிப்பர். மேற்கு வங்கத்தில் உள்ள மித்னாபூர் மாவட்டத்தில் உள்ள கரக்பூரில் வடஇந்திய, தென்னிந்திய மக்கள் தொகை அதிகம். அங்கு ராவணனின் பெரிய உருவச் சிலை ஒன்றை செய்து அதில் பட்டாசுகளை நிரப்பி தீ அம்பு எய்து அதனை தூள் தூளாக சிதறடிப்பார்கள். குறிப்பாக, ஐப்பசி மாதம் என்பதை மக்கள் குழப்பங்களில் இருந்து விடிவுகாலம் பிறந்ததாக நம்பும் வழக்கம் உள்ளது. அதற்காகவே, பல்வேறு வடிவங்களில் தீபாவளி கொண்டாடப்படுகிறது" என்கிறார் பாலச்சந்திரன்.
"நல்ல நாள் என்றாலே கறி சோறுதான்"
வட இந்திய, தென்னிந்திய தீபாவளி குறித்து பிபிசி தமிழிடம் பேசிய எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன், `` நமது கலாசாரத்தில் தீபாவளி என்ற பண்டிகையே இல்லை. இன்றளவும் கிராமப்புறங்களில் பெரிய பண்டிகை என்றால் அது பொங்கல்தான். கடந்த 20 ஆண்டுகளாகத்தான் தமிழர்களுக்கு தீபாவளி என்பது அறிமுகமானது. அதுவும் தொலைக்காட்சி வந்த பிறகுதான் தீபாவளி என்பது அனைவரும் கொண்டாடும் பண்டிகையாக மாறியது. வர்த்தகம்தான் அதனை பெரிய பண்டிகையாக மாற்றியது. மற்றபடி, நம்பிக்கை என்ற அடிப்படையில் பார்த்தால் தமிழர்களுக்கும் தீபாவளிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், "கிராமப்புறங்களில் நல்ல நாள் என்றாலே கறி சோறுதான். மொட்டை போடுவது, காது குத்துவது முதல் கல்யாணம் வரையில் அங்கு கறி சாப்பாடு இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளும் இல்லை. இங்கு மட்டும்தான், `வெள்ளிக்கிழமை என்றாலே சாப்பிடக் கூடாது, புரட்டாசி மாதம் சாப்பிடக் கூடாது' எனப் புதிய புதிய கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். இங்கு கொண்டாட்டம் என்றாலே அசைவம்தான்.
நமது விழா காலங்களில் சைவம் என்பதே இல்லை. வேட்டையாடிய மனிதனுக்கு அவன் வேட்டையாடிய விலங்குதான் உணவு. வடஇந்தியாவிலும் ஏராளமான அசைவ உணவுகள் உள்ளன. அங்கு அசைவம் கிடையாது என்பது தவறான புரிதலாக உள்ளது. நமக்கு இட்லி, ஆட்டுக்கறி இருப்பது போல, அவர்கள் அரிசி ரொட்டி, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, மீன் என எடுத்துக் கொள்கின்றனர்" என்கிறார்.
" தீபாவளியை கொண்டாடும் ஒரு பிரிவினர் சைவ உணவுகளைத்தான் எடுத்துக் கொள்கின்றனர். அன்றைக்கு அமாவாசை தினம் என்பதால் பலரும் சாப்பிட மாட்டார்கள். நீங்கள் எந்த பிரிவினர் என்பதைப் பொறுத்துத்தான் உணவு வருகிறது. அடித்தட்டு மக்கள் ஆண்டு முழுவதும் தங்களுக்கு விருப்பமான உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர். நான் பார்த்தவரையில் நகர வாழ்க்கையில் உள்ளவர்களிடம் ஆட்டுக்கறியும் இட்லியும் வழக்கத்தில் இல்லை" என்கிறார், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.