வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 5 மே 2020 (15:40 IST)

கொரோனா வைரஸ்: மக்களை வேவு பார்க்கின்றனவா இந்திய அரசின் கோவிட்-19 செயலிகள்?

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மக்களைக் கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா பயன்படுத்துவது தனியுரிமைப் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் 'ஆரோக்கிய சேது' உட்பட மத்திய, மாநில அரசுகள் பல அதிகாரபூர்வ செயலிகளைப் பயன்படுத்துகின்றன. கொரோனா தொற்று இருக்கும் ஒருவர் அருகில் வந்தால் எச்சரிக்கை செய்யும் வகையில் இந்த செயலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த செயலிகளைத் தரவிறக்கிப் பயன்படுத்துகிறவர்களின் அந்தரங்கத்தில் ஊடுருவி வேவு பார்க்க இவை உதவுவதாகவும், டிஜிடல் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இது தவிர, கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பொது முடக்க நிலையின்போது பலர் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதாலும், இணையவழி நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் பிற இணைய வழி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாலும் இணைய வழிக்குற்றங்கள் அதிகரிக்கும் என்று சைபர் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மே 5-ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 46,433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களில் 1,568 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் செல்போன் மூலம் செயல்படும் தொடர்புத் தேடல் கருவிகள் இந்தியாவில் பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றில் அரசின் முன்னோடி செயலியாக இருப்பது ஆரோக்கிய சேது. பயனர்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் தந்து இதில் புகுபதிவு செய்துகொள்ளவேண்டும். ஜிபிஎஸ் மற்றும் புளூடூத் போன்ற வசதிகளை கொண்டு தொடர்புத் தேடலை மேற்கொள்கிறது இந்த செயலி.

ஏப்ரல் 16ம் தேதி 'தி பிரின்ட்' இணைய தளத்தில் வெளியான ஒரு செய்தியில் அதுவரையில் இந்த செயலி 1 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, இந்திய மாநிலங்கள் சிலவற்றில், வேறு சில கொரோனா வைரஸ் தொடர்பான செயலிகளும் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் சில செயலிகள், பயனர்கள் நடமாட்டத்தை, நிகழும்போதே நேரிடையாக காட்டுகிறவை.

தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க ‘கோவிட் சேஃப்டி ஆப்’ என்ற செயலியைப் பயன்படுத்துகிறது கேரள மாநிலம். ‘குவாரண்டைன் வாட்ச்’ என்ற செயலியைப் பயன்படுத்துகிறது கர்நாடகம். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் காலை 7 மணி முதல் இரவு 9 வரை இந்த செயலி மூலம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை செல்ஃபி படங்களை எடுத்து அனுப்பவேண்டும். மகாராஷ்டிர மாநில தொடர்பு தேடலுக்காக அரசு ‘மகாகவச்’ என்ற செயலியைப் பயன்படுத்துகிறது என்று குறிப்பிடுகிறது ‘தி பிரின்ட்’ இணைய தளம்.

தனியுரிமை மீறல் கவலைகள்

இந்த செயலிகளால் பயனர்களின் தனியுரிமையை மீற முடியும் என்று அரசுகளின் கைகளில் இவை மக்களைக் கண்காணிப்பதற்கான சாதனங்களாகப் பயன்படும் என்றும் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் கவலை தெரிவிப்பதாக குவார்ட்ஸ் என்ற இணைய தளம் தனது ஏப்ரல் 15ம் தேதி செய்தியில் தெரிவித்துள்ளது. “இந்த உலகத் தொற்று நேரத்தில் தேவைதான் என்றாலும் கண்காணிப்புத் தொழில்நுட்பங்கள் தொடர்பான நீண்ட கால விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்ற இரு முரண்பட்ட நோக்கங்களை சரிக்கட்டுவது பற்றி விவாதிக்கப்படுகிறது" என்கிறார் தொழில்நுட்பம் மற்றும் பொதுக் கோட்பாடு தொடர்பான வல்லுநர் காசிம் ரிஸ்வி.

மக்களை வேவு பார்ப்பதை இது போன்ற செயலிகள் நிறுவனமயமாக்கும் இடர்ப்பாடு இருப்பதாக இணைய சுதந்திர அமைப்பு (இன்டர்நெட் ஃப்ரீடம் ஃபெடரேசன்) தெரிவித்துள்ளது. டிஜிடல் யுகத்தின் தனியுரிமை விடயங்களைக் கையாள்கிற இந்த அமைப்பு டெல்லியில் இருந்து செயல்படுகிறது. “பொது சுகாதாரம் என்ற போர்வையில் மக்களை வேவு பார்ப்பதை விரிவுபடுத்துவதற்கு தற்போதைய சிக்கலை அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது” என விமர்சகர்கள் கவலை தெரிவிப்பதாக ஸ்க்ரால் இணைய தளத்தில் ஏப்ரல் 13ம் தேதி வெளியான ஒரு செய்தி கூறுகிறது.

இந்தியாவில் ஏற்கெனவே ஒரு தரவுப் பாதுகாப்பு சட்டம் இல்லை. எனவே சட்டப் பாதுகாப்பும் இல்லை என்பதை தனியுரிமை வல்லுநர் அப்கர் குப்தா கவனப்படுத்துகிறார் என்கிறது ஏப்ரல் 2ம் தேதி வெளியான இந்தியா டுடே செய்தி ஒன்று.

இதுகுறித்து விவரிக்கும் காசிம் ரிஸ்வி, மக்களவையில் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா 2019 டிசம்பர் 11ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், “தனியுரிமை கவலைகளைக் கவனிப்பதற்கான சுதந்திரமான தரவுப் பாதுகாப்பு ஆணையம் ஒன்றை அமைக்க அந்த மசோதாவில் வழிவகை ஏதுமில்லை” என்கிறார்.

அதைப் போலவே, 'ஆரோக்கிய சேது' செயலி திரட்டும் தகவல்கள் மிகவும் கூர்மையானவை. எனவே தரவு பாதுகாப்பு உடைந்தாலோ, தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ தனிநபர்களின் அந்தரங்க உரிமை மோசமாகப் பாதிக்கும் என்று ‘மின்ட்’ என்ற ஆங்கில நாளேட்டில் ஏப்ரல் 10ம் தேதி வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கவலைகளை அரசு நிராகரிக்கிறது. “ஆரோக்கிய சேது செயலி, வேவு பார்ப்பதற்குப் பயன்படுத்தப்படவில்லை. கோவிட் நோயாளிகளை கண்காணிக்கவே பயன்படுத்தப்படுகிறது” என்று தி பிரின்ட் இணைய தளத்தில் ஏப்ரல் 16ம் தேதி வெளியான செய்தியில் தெரிவித்துள்ளார் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ஜெயின்.

இணையப் பாதுகாப்பும், குற்றங்களும்

இந்த பொது முடக்க நிலைக் காலத்தில் இணையவழிக் கொள்முதல், நிதிப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட இணைய வழி நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், இணையவழிக் குற்றங்கள் அல்லது சைபர் குற்றங்கள் குறித்த கவனம் முன்னிலை பெறுகிறது.

வீட்டில் இருந்தே வேலை செய்யும் நிலையில், மிக முக்கியமான தரவுகளை தங்கள் தனிப்பட்ட சாதனங்கள் வழியாக ஏராளமானோர் கையாள்வதால் சைபர் குற்றவாளிகள், ஹேக்கர்கள் ஆகியோர் வலையில் விழுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

பொது முடக்க நிலை காலத்தில் சைபர் தாக்குல்கள் அதிகரிக்கலாம் என்று இந்தியாவின் மைய சைபர் பாதுகாப்பு முகமையான கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் – இந்தியா (CERT-In) ஏப்ரல் 14ம் தேதியே எச்சரித்தது.

“போலியான கணக்குகளைப் பயன்படுத்தியும், பல்வேறு செயலிகளின் பலவீனங்களைப் பயன்படுத்தியும் பணம் கையாடல் செய்யப்படுகிறது” என்று குறிப்பிடுகிறது ஏப்ரல் 15ம் தேதி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியான செய்தி. இணைய வழி மோசடிகள் குறித்து டெல்லி போலீஸ் மார்ச் 29ம் தேதி எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்கு கொரோனா வைரஸ் முடக்க நிலையை சைபர் குற்றவாளிகள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வதாக பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல வங்கிகள் எச்சரித்ததாக ஜீ நியூஸ் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது.

வீடியோ கான்ஃபரன்சிங் செயலியான ஜூம் வழியாக சைபர் தாக்குதல்கள் நடத்த வாய்ப்பிருப்பதாக கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் – இந்தியா எச்சரித்தது. அந்த செயலியில் சில பலவீனங்கள் இருப்பதாகவும் இதனால் முக்கியத் தகவல்கள் கசிய வாய்ப்பிருப்பதாகவும் ஏப்ரல் 16ம் தேதி வெளியிட்ட தமது அறிவுரையில் தெரிவித்திருந்தது இந்தியாவின் உள்துறை அமைச்சகம்.

“ஒரு நிறுவனத்துக்கு சொந்தமாக உள்கட்டமைப்பு இருந்து, விபிஎன் வழியாக தங்கள் வளங்களைக் கையாளாமல், பொதுத் தளங்களைப் பயன்படுத்தவது ரகசியத் தரவுகள் கசிவதற்கு வழி ஏற்படுத்திவிடும்” என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் எச்சரித்துள்ளார் ஆர்.கே. விஜ் என்ற ஆய்வாளர். ஆனால், பயனர் பாதுகாப்பை மிகவும் முக்கியமாக தாங்கள் எடுத்துக்கொள்வதாக ஜூம் செயலி நிறுவனம் எதிர்வினையாற்றியது.