செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 5 மே 2020 (15:20 IST)

கொரோனா வைரஸ் - நிதி திரட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அமெரிக்கா, ரஷ்யா!

கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்காக எட்டு பில்லியன் (800 கோடி) அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என உலக தலைவர்களால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
 
இதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தால் இணையத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் 40 நாடுகள் கலந்து கொண்டன. இந்த தொகையைக் காட்டிலும் மேலும் கூடுதலான தொகை தேவைப்படலாம் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா ஃபான் டேர் லெயன் தெரிவித்தார். இந்த நன்கொடை 30க்கும் அதிகமான நாடுகள், ஐ.நா சபை, தொண்டு நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களால் வழங்கப்பட்டன.
 
இந்த கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பங்கேற்கவில்லை. சீனா சார்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சீன பிரதிநிதி இதில் கலந்து கொண்டார். ஐரோப்பிய ஒன்றியம் தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது. நார்வேயும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய அளவிலான தொகையை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
 
பிரான்ஸ் 500 மில்லியன் யூரோ தருவதாக தெரிவித்துள்ளது. சௌதி அரேபியா, ஜெர்மனி போன்ற நாடுகளும் கிட்டதட்ட இதே அளவு தொகையை தருவதாக உறுதியளித்துள்ளன. ஜப்பான் 800 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
 
தற்போதைய நெருக்கடியிலிருந்து இயல்பு வாழ்விற்கு திரும்புவதற்கு மருந்து ஒன்றே வழி என ஐ.நா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.