1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 13 மார்ச் 2021 (19:22 IST)

கொரோனா வைரஸ் அலை மீண்டும் எழுச்சி: புதிய திரிபுவை அறிய தீவிரம் காட்டும் இந்தியா

எல்லா வைரஸ்களையும் போலவே, கொடிய தொற்றுநோயை ஏற்படுத்திய கொரோனா வைரஸும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் போது, சிறு  மாற்றங்களுக்கு ஆட்படுகின்றன. இந்தப் பிறழ்வுகளில் பெரும்பாலானவை தாக்கத்தை ஏற்படுத்தாதவை. செயல்படும் விதத்திலும் பெரும் மாற்றம் இருக்காது.

ஆனால் சில பிறழ்வுகள் மனித உயிரணுக்களுடன் இணையவும் அவற்றில் நுழையவும் வைரஸ் பயன்படுத்தும் ஸ்பைக் புரதத்தில் மாற்றங்களைத் தூண்டுகின்றன -  இந்த மாறுபாடுகள் அதிகம் பரவும் தன்மையைப் பெற்றிருக்க வாய்ப்புண்டு. எனவே நோயின் தீவிரம் அதிகமாகலாம் அல்லது தடுப்பு மருந்துக்குக்  கட்டுப்படாதவையாக இருக்கலாம். இத்தகைய வகைகள் ஏற்கனவே இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் அடையாளம் காணப்பட்டுள்ளன, இப்போது  அவை பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியும் உள்ளன.
 
கடந்த வாரம், அமெரிக்காவின் உயர் சுகாதார அதிகாரி ஒருவர், அதிக தொற்றும் தன்மை உள்ள இந்த வகைகள் பரவினால், நாட்டில் நான்காவது அலை  அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்தார். பிரேசிலில் கண்டறியப்பட்டுள்ள பிறழ்வு வகையானது அதிகம் தொற்றுக் தன்மை கொண்டதாகவும்  கடந்த முறை வைரஸ் தாக்கியதால் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பு சக்தியையும் மீறியது என்றும் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவிலும்  ஐரோப்பாவிலும் மீண்டும் ஏற்பட்ட புதிய அலைக்கு பிரிட்டனில் பரவிய புதிய பிறழ்வு வகையே காரணமாகும்.
 
உலகெங்கிலும் உள்ள மரபணு ஆய்வாளர்கள், இந்தக் கவலைக்குரிய பிறழ்வுகளைக் கண்டறிய முயன்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து  மாதிரியைச் சேகரித்த பின், வைரஸின் மரபணுவை வரிசைப்படுத்தி, அதன் மூலம் விஞ்ஞானிகள் மாற்றங்களைக் கண்டறிகிறார்கள். அவர்கள், வைரஸின் மரபணுக்  குறியீட்டைக் கண்டறிந்து, அதன் கட்டுமானம் குறித்த தகவலைத் திரட்டுகிறார்கள். அதைக்கொண்டு, பிறழ்வுகளைக் கண்காணிக்கத் தொடங்குகின்றனர்.
 
உலகிலேயே நாவல் கொரோனா வைரஸின் மரபணுவை வரிசைப்படுத்திய ஐந்தாவது நாடு இந்தியா. கடந்த ஆண்டு ஜனவரியில் தென் மாநிலமான கேரளாவில்  பதிவு செய்யப்பட்ட முதல் நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியிலிருந்து இதைச் செய்தனர். அப்போது முதல் இந்தியாவில், ஒரு கோடிக்கும் அதிகமான  கொரோனா நோயாளிகள் இருப்பதாக பதிவாகின. இது அமெரிக்காவுக்கு அடுத்த இடமாக இருந்தது. ஒன்றரை லட்சம் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
 
ஆனால் இப்போதுதான் இந்தியா கோவிட் -19 க்கு காரணமான சார்ஸ்-கோவி -2 வைரஸின் உள்ளூர் மாதிரிகளின் மரபணு வரலாறுகளைக் கண்டறிய ஒரு  வரையறுக்கப்பட்ட கண்காணிப்பு அமைப்பைக் கொண்டுள்ளது.
 
இது செய்யப்படும் நேரமும் முக்கியமானது: நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நேரத்தில், சில மாநிலங்களில் தொற்றின் தாக்கம்  வேகமாகப் பரவுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, வைரஸின் புதிய வகைகள் தான் இந்த உயர்வுக்குக் காரணமாக இருக்கலாம் என்ற அச்சம்  உருவாவது இயல்பே.
 
வெளிநாடுகளில் கன்டறியப்பட்ட மூன்று பிறழ்வுகளால், குறிப்பாக, பிரிட்டன் வகையால், பாதிக்கப்பட்டதாக இந்தியாவில் 242 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.  எனினும், இந்தப் பிறழ்வுகளால் தாக்கப்படுவதை விட, பரவல் சற்று குறைந்ததும், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவதாலேயே  தொற்று பரவுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
ஆனால் மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா போன்ற தொற்று அதிகம் பரவும் மாநிலங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் காணப்படும் இரண்டு வகைகளையும்  மரபணு விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இரண்டு வகைகளுக்கும் இந்தத் தொற்றுப் பரவலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று கண்டறிய,  நாங்கள் அதிகமான மாதிரிகளைச் சேகரித்து வருகிறோம். அலட்சியம் செய்து விட முடியாது" என்று இந்தியாவின் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின்  இயக்குநர் டாக்டர் சுஜீத் குமார் சிங் கூறினார்.
 
ஜனவரி மாதத்தில், மரபணு விஞ்ஞானிகளின் ஒரு குழு ஒரு ஆய்வறிக்கையில், இந்தியா இன்னும் தனது முழுத் திறமையும் கொண்டு மரபணு  வரிசைப்படுத்தவில்லை என்று கவலை தெரிவித்தது. 10.4 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட நோயாளிகளில் சுமார் 6,400 மரபணுக்களை (0.06%)  மட்டுமே டெபாசிட் செய்துள்ளது. இப்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 10 மரபணு ஆய்வகங்களின் கூட்டமைப்பு வரிசைப்படுத்தலை விரைவுபடுத்துவதற்கும்  முடிவுகளை உடனடியாக அறிவிப்பதற்கும் பணிக்கப்பட்டுள்ளது.
 
"தொடர்ந்து கண்காணித்து, கவலை அளிக்கும் புதிய வகைகள் எதுவும் நம் மக்களிடையே பரவவில்லை என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். இப்போது  நடக்கவில்லை என்பதனால் எதிர்காலத்தில் நடக்காது என்றும் பொருளல்ல. மேலும் நாம் இதற்கான ஆதாரங்கள் விரைவில் சேகரிக்கப்படுவதையும் உறுதிசெய்ய  வேண்டும்."என்று ஒரு முன்னணி வைராலஜிஸ்ட் டாக்டர் ஷாஹித் ஜமீல் கூறினார்.
 
அதனால்தான் மரபணு வரிசைமுறை முக்கியமானது. தொடக்க நிலையில், தொடர்ச்சியான முயற்சிகளை அதிகரிக்க இந்தியா 14 மில்லியன் டாலர்களை  ஒதுக்கியுள்ளது. நோயாளியிடமிருந்து பெறப்பட்ட மாதிரியிலிருந்து மரபணுப் பொருளைத் தனிமைப்படுத்தும், தங்கத் தரமான பி.சி.ஆர் (பாலிமரேஸ் செயின்  ரியாக்ஷன்) சோதனைகள் மூலம் நோய் கண்டறியப்பட்ட அனைத்து மாதிரிகளில் 5% மாதிரிகளை வரிசைப்படுத்துவதே இதன் நோக்கம். "இது எட்டக்கூடிய இலக்கு  தான்" என்று டெல்லியை தளமாகக் கொண்ட ஜெனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் (ஐஜிஐபி) இயக்குநர் டாக்டர் அனுராக் அகர்வால்  கூறுகிறார்.
 
கடந்த 10 மாதங்களில், 22 மாநிலங்களில் இருந்து 6,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் மாதிரிகளை இந்தியா வரிசைப்படுத்தியுள்ளது. (இவற்றில்  பெரும்பான்மையானவை ஐரோப்பாவிலிருந்து வந்த பயணிகளால் பரவிய வகை) 7,600 க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில்  பெரும்பாலானவை எந்த விளைவையும் ஏற்படுத்தாது" என்று ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம் (சி.சி.எம்.பி)  இயக்குநர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா கூறுகிறார்.
 
வேறு எந்த நகரத்திலும் இல்லாத அளவுக்கு பெங்களூரில் தான் இந்த வைரஸின் பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய அறிவியல் நிறுவனத்தின்  ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள், வைரஸ் இப்போது முன்பை விட வேகமாக மாறுகிறது - பெங்களூரில் அடையாளம் காணப்பட்ட மூன்று திரிபுகள்,  அவற்றின் மரபணுக்களில் 27 பிறழ்வுகளைக் கொண்டிருந்தன, அவை ஒரு மாதிரிக்கு 11 க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டுள்ளன, இது தேசிய சராசரி (8.4)  மற்றும் உலக சராசரி (7.3) இரண்டையும் விட அதிகம்.
 
இந்தியா போன்ற ஒரு பரந்த மற்றும் பன்முகத் தன்மை கொண்ட நாட்டில் அளவுகோல்களை வரிசைப்படுத்துவது எளிதல்ல.
 
ஆய்வகங்கள் உள்ளூரில் மாதிரிகளை எடுக்க வேண்டும். அடுத்த கட்ட பணிக்கான தானியங்கித் தளங்கள் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு அளவுகளில்  உள்ளன. இதற்குப் பயன்படுத்தப்படும் உயிரிரசாயனக் கலவைகள் விலை உயர்ந்தவை மற்றும் இறக்குமதி செய்யப்பட வேண்டும்.
 
உறைவிப்பானில் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. இயந்திரங்கள் மரபணு பொருத்தங்களைச் செய்கின்றன. ஒரு மாதிரியை வரிசைப்படுத்துவதற்கு $ 75 வரை  செலவாகும். பயிற்சி பெற்ற பணியாளர்களால் மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும், சிறப்புக் கொள்கலன்களில் சேமிக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள  ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். கேரளா போன்ற மாநிலங்கள் இதில், மற்றவற்றை விடச் சிறப்பாகச் செயல்படுகின்றன: இது ஒவ்வொரு வாரமும் 25  மாதிரிகளை டெல்லியில் உள்ள ஒரு மரபணு வரிசைமுறை ஆய்வகத்திற்கு அனுப்புகிறது.
 
வழக்கமாக ஒரு மாதிரியை வரிசைப்படுத்த 48 மணிநேரம் வரை ஆகும். ஆனால், தனிமைப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச பயணிகளின் மாதிரிகளை வரிசைப்படுத்த  வேண்டும் என்றால், அதை விரைவாகச் செய்ய வேண்டும். டாக்டர் மிஸ்ரா, 24 மணி நேரத்தில், மொத்த வரிசைப்படுத்தலையும் நிறைவு செய்யாமலே ஒரு  குறிப்பிட்ட மாறுபாட்டை அடையாளம் காண ஒரு வழியைத் தனது ஆய்வகம் கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகிறார்.
 
கேம்பிரிட்ஜ் சார்ந்த வைராலஜிஸ்ட் பேராசிரியர் ரவீந்திர குமார் குப்தா, கொரோனா வைரஸ் குறித்து அறிய, வரிசைப்படுத்துதல் மிகவும் முக்கியமானது”  என்கிறார். எனினும், சுகாதாரத் துறைக்கு அதிகம் நிதி ஒதுக்காத இந்தியா போன்ற பொருளாதார நாடுகள், தங்களது நிதி ஒதுக்கீட்டைச் சீரமைக்க வேண்டும் என்று  கூறுகிறார். "வரிசைப்படுத்துதல் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன், ஆனால் மிக முக்கியமான விஷயம், அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடுவதுதான்"  என்றும் "வரிசைப்படுத்துவது பல உயிர்களைக் காப்பாற்றவோ கொள்கை மாற்றத்திற்கோ உதவாது” என்றும் அவர் கூறினார்.
 
தொற்று நோயை வெல்லும் தருவாயில் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனால் குறிப்பிடப்படும் இந்தியா, பிறழ்வுகளால் பாதிக்கப்பட்டோரைக்  கண்டறியும் பணியை முடுக்கி விட்டுள்ளது. இந்தியா இப்போது நல்ல நிலையில் தான் உள்ளது. மாறுபாடுகளுக்கான வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. "இந்தியா  ஒரு நல்ல நிலையில் உள்ளது. நோய் பாதிப்புகளும் இறப்பு விகிதமும் வெகுவாகக் குறைந்துள்ளன. மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலை இல்லை. தடுப்பு  மருந்து வழங்கலும் வேகம் பெற்று வருகிறது.” என்று நம்பிக்கை தெரிவிக்கும் டாக்டர் மிஸ்ரா,
 
"இதை சீர்குலைக்கக்கூடிய ஒரே விஷயம் ஆபத்தான புதிய பிறழ்வு தான். அது உள்நாட்டிலேயே உருவானதாகக் கூட இருக்கலாம்." என்று எச்சரிக்கவும் செய்கிறார்.