வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (14:14 IST)

கொரோனாவால் மூடப்பட்ட மசூதிகள் - ரமலான் தொழுகைகள் நடப்பது எப்படி?

அரபு நாடுகளில் இஸ்லாமியர்களின் புனித காலமான ரமலான் மாதம் இன்று முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் பல இஸ்லாமிய நாடுகள் தங்களது பொது முடக்க நிலையை ஓரளவுக்கு தளர்த்தியுள்ளன.இருப்பினும் தொடரும் சில கட்டுப்பாடுகளால், பல இஸ்லாமியர்களால் தொழுகைக்கு மசூதிக்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. பலநாடுகள் நேரலை மூலமாக தொழுகைகளை நடத்த முடிவெடுத்துள்ளன.

ரமலான் தொழுகைக்கு கட்டுப்பாடு

செளதி அரேபியாவில் உள்ள புனித தலங்களான மெக்கா மற்றும் மதினாவில், இரவில் நடைபெறும் தராவீ தொழுகையில், மதகுருமார்கள் மற்றும் அந்த தலங்களின் ஊழியர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என அந்நாட்டின் அரசர் சல்மான் தெரிவித்துள்ளார்.

மக்கள் இந்த புனித தலங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் மக்கள் வீட்டிலிருந்தே தங்கள் தொழுகைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் செளதி அரசு அறிவித்துள்ளது. இஸ்லாமியர்களின் மூன்றாவது முக்கிய புனித தலமான இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் உள்ள ஹராம் அல் ஷரீப் மசூதியில் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கடந்த 1400 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது கடினமான, மனதிற்கு வலியை ஏற்படுத்தக்கூடிய முடிவு," என அந்த தலத்தின் இயக்குநர் சேக் ஒமர் அல் கிஸ்வானி தெரிவித்துள்ளார்.

மதகுருமார்களும், அந்த தலத்தின் ஊழியர்களும் தொழுகைகள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழுகைகள் இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, எகிப்தில் உள்ள மசூதிகள் மூடியே இருக்கும் எனவும், இரவு நேர பொது முடக்க நிலை தொடரும் எனவும் அந்நாட்டின் அதிபர் அப்துல் ஃபடா அல் சிசி தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்த கட்டுப்பாடுகளை மக்கள் மீறினால், விளைவுகள் மோசமாகிவிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்தையொட்டி, பொது முடக்க நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்க்கு ஒரு கோடி உணவுப் பொட்டலங்களை அளிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இதுதவிர ரமலான் மாதத்தை முன்னிட்டு, மக்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு சில தளர்வுகளையும் அந்நாடு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் ரமலான் மாதம் நாளை முதல் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரமலான் தொழுகைகளுக்காக மசூதிகளை திறந்து வைக்கவும் அந்நாடு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மசூதிகளில் நடைபெறும் தொழுகைகளில் தனிநபர் இடைவெளி சரியாக பின்பற்றப்படுகிறதா என அரசு தீவிரமாக கண்காணிக்கவிட்டால், அடுத்த மாதம் பாகிஸ்தானில் கொரோனா தொற்று எண்ணிக்கை உச்சத்தை அடையும் என அந்நாட்டின் மருத்துவ சங்கங்கள் எச்சரித்துள்ளன.