வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2019 (21:16 IST)

பாகிஸ்தானில் ஒட்டிப் பிறந்த குழந்தைகள் சாபா, மார்வா: 4 மாதம், 55 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றி

தலைப் பக்கமாக ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாக பிரித்துள்ளனர் லண்டனை சேர்ந்த மருத்துவர்கள்.
55 மணி நேரம் நடந்த நான்குகட்ட அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு குழந்தைகள் இருவரும் தனித்தனியாக நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
 
இரட்டையர்களின் தாயான சைனாப்பிற்கு ஏழு குழந்தைகளின் பிரசவமும் வீட்டிலேயே நடந்தது.
 
எனவே சைனாப் இந்த இரட்டையர்களை கருத்தரித்து இருந்தபோதும் வீட்டிலேயே பிரசவம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.
 
இரட்டடையர் இருவரும் ஒட்டி பிறப்பர்கள் என்று சைனாப்பிற்கு தெரிந்திருக்கவில்லை.
ஆனால் ஸ்கேன் செய்து பார்த்தபோது அந்தப் பிரசவத்தில் சிக்கல் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
 
எனவே மருத்துவமனையில் பிரசவம் பார்க்க வேண்டும் என்று அவருக்கு கூறப்பட்டது.
 
குழந்தை பிறப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பு சைனாப்பின் கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார்.
 
இரட்டையர் இருவரும் ஒட்டிப் பிறப்பர்கள் என்று சைனாப்பிற்கு தெரிந்திருக்கவில்லை. அதை அவர் எதிர்பார்க்கவும் இல்லை.
 
பிறந்த பிறகு அந்த குழந்தைகள் ஒரு சராசரி வாழ்க்கையை வாழ சைனாப் பெரும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
 
பிரிட்டனில் உள்ள ’க்ரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட்’ மருத்துவமனையில் நடைபெற்ற இந்த அறுவைசிகிச்சையை படம் பிடிக்க பிபிசிக்கு பிரத்யேக அனுமதி கிடைத்தது.
 
இந்த குழந்தைகள், 2017ஆம் ஆண்டு பெஷாவரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தனர். பிறவியிலேயே இந்த இருவரின் மண்டை ஓடுகள் ஒட்டிக்கொண்டிருந்தன.
 
 
இரட்டையர்களின் அறுவை சிகிச்சை
 
இரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக குடும்பத்தினருக்கு சொல்லப்பட்ட்து.
 
ஆனால் அவர்களின் தாயார் குழந்தைகள் பிறந்தவுடன் பார்க்கமுடியவில்லை.
 
அறுவை சிகிச்சை முடிந்து அவர் குணமாகிவந்தார்.
 
ஐந்து நாட்கள் கழித்து சைநாப்பிற்கு முதலில் குழந்தைகளின் புகைப்படத்தை காட்டினர்.
 
அவர் அதிர்ச்சியை மெதுவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அவ்வாறு செய்யப்பட்டது.
 
ஆனால் அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் சைனாப் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்துள்ளார்.
 
"அவர்கள் மிகவும் அழகாக இருந்தனர். வெள்ளை நிறத் தோலுடன், அழகிய கூந்தலுடன் அழகாக இருந்தனர். அவர்கள் ஒட்டிப் பிறந்துள்ளனர் என்பது எல்லாம் எனக்கு தோன்றவில்லை அவர்கள் கடவுளால் கொடுக்கப்பட்டவர்கள்." என்கிறார் சைனாப்.
 
அவர்கள் அந்த குழந்தைகளுக்கு சாஃபா, மார்வா என்று பெயரிட்டனர்.
 
அதன்பிறகு ராணுவ மருத்துவமனை ஒன்று இவர்களை பிரிக்க முடியும் என்று கூறியது. ஆனால் இரட்டையர்களில் ஒருவர் இறந்துவிடுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதனை அந்த தாய் விரும்பவில்லை.
 
அந்த குழந்தைகளுக்கு மூன்று மாதம் ஆனபோது, லண்டனில் உள்ள உலகின் முன்னனி குழந்தைகள் மருத்துவமனையான `க்ரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட்டை’ சேர்ந்த குழந்தைகளுக்கான நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரான ஒவாசி ஜிலானியை சந்தித்தனர் சாஃபா மற்றும் மார்வாவின் குடும்பத்தினர்.
 
அதிர்ஷ்டவசமாக அவர் காஷ்மீரில் பிறந்தவர் என்பதால் அந்த குடும்பத்திடம் எளிதாக பேசி பழக அவரால் முடிந்தது.
 
அந்த குழந்தைகளின் மருத்துவ அறிக்கையை பார்த்த அவர், அவர்களுக்கு 12 மாதம் ஆவதற்குள் அறுவை சிகிச்சை செய்துவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
 
2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், குடும்பத்தினருக்கு இங்கிலாந்துக்கு விசாவும் கிடைத்துவிட்டது. ஆனால், அறுவை சிகிச்சைக்கான நிதியுதவிதான் கிடைக்கவில்லை. மருத்துவர் ஜிலானி சிறிது பணம் திரட்டியிருந்தார்.
 
மருத்துவர்கள் ஜிலானி மற்றும் டுனாவே
ஆனால் அதற்குள் அந்த குழந்தைகளுக்கு 19 மாதங்கள் ஆகிவிட்டன. மேலும் தாமதித்தால் அறுவை சிகிச்சை கடினமாகிவிடும் என்பதால் இரட்டையர்களின் குடும்பத்தை உடனடியாக இங்கிலாந்துக்கு வர சொன்னார் ஜிலானி.
 
"என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர்கள் இங்கிலாந்துக்கு வந்துவிட்டனர். ஆனால் போதிய பணத்தை திரட்ட முடியவில்லை. எனக்கு மிகவும் கவலையாகிவிட்டது. இதனை என்னுடைய பொறுப்பாக நான் நினைத்தேன்." என்கிறார் ஜிலானி.
 
ஒரு நாள் ஜிலானி வழக்கறிஞராக இருக்கும் தனது நண்பர் ஒருவருடன் உணவருந்திக் கொண்டிருந்தார். அந்த சமயம் அதிர்ஷடவசமாக விதி மாறியது. இரட்டையர்களின் கதையை கேட்டவுடன் தனது அலைபேசியை எடுத்த அந்த வழக்கறிஞர், யாரோ ஒருவருக்கு ஃபோன் செய்தார். பின் அந்த மருத்துவரை அழைப்பில் இருப்பவரிடம் அனைத்தையும் விளக்க சொன்னார்.
 
அழைப்பின் மறு பக்கத்தில் இருந்தவர் பாகிஸ்தான் தொழிலதிபர் முர்டாசா லகானி. சிறிது நேரத்தில் அவர் அறுவை சிகிச்சைக்கான செலவை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டார்.
 
"அந்த இரட்டையர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். நானும் அங்கிருந்துதான் வருகிறேன். நான் உதவி செய்ததற்கு முக்கிய காரணம், எனது உதவி இரண்டு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் என்பதுதான். எனக்கு அது எளிதானதாக இருந்தது" என்கிறார் லகானி.
 
ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் பொதுவாக ஒரே கருமுட்டையில் இருந்து பிறந்தவர்கள்.
 
இவர்கள் இவ்வாறு இப்படி பிறந்ததற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. இரு கருமுட்டைகளாக பிரிந்தது தாமதமாக நடந்திருக்கலாம், அது சரியாக பிரியாமல் இருந்திருக்கலாம். அல்லது பிரியும் போது இரு கருமுட்டைகளும் முழுவதுமாக பிரியாமல் சேர்ந்திருக்கலாம். உடம்பில் அந்த பகுதி ஒட்டி இருந்திருக்கலாம்.
 
இது நடைபெற்றால் பொதுவாக இரட்டையர்கள் மார்பு பக்கத்திலோ அல்லது இருப்பு மற்றும் அடி வயிற்றிலோ ஒட்டி பிறப்பார்கள்
 
சாஃபா மற்றும் மார்வா நேர் எதிராக தலைப் பகுதியில் ஒட்டிப் பிறந்தது சூழ்நிலையை சிக்கலாக்கியது.
 
இரட்டையர்களின் மூளை, ரத்த நாளங்களை பிரிக்கும் அறுவை சிகிச்சையை ஜிலானி மேற்கொள்வார். ஆனால் குழந்தைகளின் மண்டை ஓட்டுப் பகுதியை சரி செய்யும் பொறுப்பு டேவிட் டுனவேவிற்கு வழங்கப்பட்டது.
 
முதல் கட்ட அறுவை சிகிச்சை 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி நடைபெற்றது.
 
அதற்கு பிறகு ஒரு மாதம் கழித்து இரண்டாம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் இரட்டையர்களின் ரத்த நாளங்கள் பிரிக்கப்பட்டன.
 
மார்வாவுக்கு முக்கிய ரத்த நாளம் கொடுக்கப்பட்டத்தில் சாஃபாவிற்கு பக்கவாதம் வந்துவிட்டது. அவளின் நிலைமை கவலைக்கிடமாக மாறிவிட்டது. பெரும் போராட்டத்துக்கு பிறகு அவள் பிழைத்துக் கொண்டாள்.
 
முதல் அறுவை சிகிச்சை நடந்து முடிந்த நான்கு மாதங்களுக்கு பிறகு அடுத்தகட்ட அறுவை சிகிச்சை தொடங்கியது.
 
அறுவை சிகிச்சைக்கு பிறகு
 
அதன்பின் ஒரு பெரிய போராட்டத்துக்குப் பிறகு சாஃபா மற்றும் மார்வா தனித்தனியாக தங்களது வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளனர்.