புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (10:09 IST)

உணவுக்காக குழந்தைகளை விற்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்

நாங்கள் ஹெராட் நகரத்திலிருந்து வெளியேறும்போது, ​​பரபரப்பான தெருக்களைக் கடந்து நீண்ட, காலியான நெடுஞ்சாலைக்கு வந்து சேர்ந்தோம்.

நாங்கள் கடந்து வந்த இரண்டு தாலிபன் சோதனைச் சாவடிகள்தான் இப்போது ஆப்கானிஸ்தானை யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதை நினைவூட்டின.
 
முதலில், தாலிபன்கள் நட்பாக இருந்தனர்; அதுவே நீடித்திருக்கவில்லை. அவர்கள் எங்கள் கார்களையும் அவர்களின் கலாசார அமைச்சகத்தால் எங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி அட்டைகளையும் சரிபார்த்தனர். நாங்கள் புறப்படும்போது, தோளில் தொங்கவிடப்பட்ட தாக்கும் துப்பாக்கியுடன் வந்த ​​ஒரு நபர் எங்களுக்கு ஒரு விரிந்த புன்னகையைக் காட்டி, "'தாலிபன்களுக்கு பயப்பட வேண்டாம். நாங்கள் நல்லவர்கள்" என்று கூறினார்.
 
இரண்டாவது சோதனைச் சாவடியில், காவலில் இருந்தவர்கள் அப்படியில்லை. அவர்கள் வித்தியாசமாக இருந்தனர்: கொஞ்சம் இறுக்கமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் அவர்கள் காணப்பட்டனர்.
 
நீங்கள் எந்த வகையான தாலிபன்களை சந்திக்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் ஒருபோதும் கணிக்க முடியாது. இவர்களில் சிலர்தான் எதிர்ப்புக் குரல் எழுப்பிய பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரை கொடூரமாகத் தாக்கியவர்கள். சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு காணொளியில் வெளிநாட்டு புகைப்படக்காரர் ஒருவரை பின்புறத்தில் துப்பாக்கியால் தாக்குவதையும் காண முடிந்தது.
 
கருணையுடன் நாங்கள் சோதனைச் சாவடியிலிருந்து நியாயமான வகையில் விரைவாகவே விடுவிக்கப்பட்டோம். ஆனால் போகும்போது எச்சரிக்கையாக ஒன்றைக் கூறினார்கள். 'எங்களைப் பற்றி நல்ல விஷயங்களை மட்டும் எழுதுங்கள்'
 
ஹெராட்டில் இருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஓர் அறையுடன் கூடிய பழுப்பு, மண் செங்கல் வீடுகள் கொண்ட ஒரு பெரிய குடியிருப்புக்கு வந்தோம்.
 
பல ஆண்டுகளாக போர் மற்றும் வறட்சியால் இடம்பெயர்ந்த பலர் தொலைதூரப் பகுதிகளில் உள்ள தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வேலை மற்றும் பாதுகாப்புக்காக இந்தப்பகுதியில் குடியேறியிருக்கின்றனர்.
 
நாங்கள் காரை விட்டு இறங்கியதும் தூசி சுழன்று வந்தது. இன்னும் சில வாரங்களில் கடுங்குளிர் தாக்கத் தொடங்கிவிடும்.
 
மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை விற்க முனைவதைப் பற்றிய செய்திகளைக் குறித்து அறிந்து கொள்வதற்காக நாங்கள் அங்கு சென்றோம். இதைப் பற்றி நான் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, ​​"நிச்சயமாக இது ஒன்று அல்லது சில தீவிர நிகழ்வுகளாக இருக்க வேண்டும்" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
 
ஆனால் நாங்கள் இப்போது கண்டறிந்திருக்கும் செய்தியை உள்வாங்கிக் கொள்வதற்கு, நான் முற்றிலும் தயாராக இல்லை.
 
நாங்கள் அங்கு சென்ற சிறிது நேரத்துக்குப் பிறகு, ஒருவர் எங்கள் குழுவில் இருக்கும் ஒருவரிடம் வந்து, "குழந்தைகளில் ஒன்றை வாங்க விரும்புகிறீர்களா?" என்று நேராகக் கேட்டார். அதற்கு 900 டாலர்களுக்கு சமமான பணம் வேண்டுமென்றார். "ஏன் குழந்தையை விற்கிறீர்கள்?" என எங்களது சகா கேட்டபோது, தனக்கு மேலும் எட்டு மகன்கள் மற்றும் மகள்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு கொடுக்க உணவு இல்லை என்றும் அந்த நபர் கூறினார்.
 
மற்றொரு பெண் தனது பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வேகமாகவும் பதற்றத்துடன் எங்களை நோக்கி பேசிக் கொண்டே வந்தபோது நாங்களும் அவரை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினோம். அவரது கையில் இருந்த பதினெட்டு மாதக் குழந்தை ஏற்கனவே விற்கப்பட்டு விட்டதாக எங்களது மொழி பெயர்ப்பாளர் கூறினார். ஏனெனில் அவர்களுக்கு பணம் தேவைப்பட்டது.
 
நாங்கள் அந்தப் பெண்ணிடம் மேலும் கேள்விகள் கேட்பதற்குள், எங்களைச் சுற்றி திரண்டிருந்த கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர், பதின்மூன்று மாத வயதுடைய தனது சகோதரியின் மகளும் விற்கப்பட்டதாகக் கூறினார். 150 மைல்களுக்கு அப்பால் உள்ள கோர் மாகாணத்தில் உள்ள பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் வாங்கியதாக அவர் கூறினார். உரிய வயதானதும், தன் மகனுக்குத் திருமணம் செய்துவைக்கப் போவதாக அந்த நபர் கூயிருக்கிறார்.
 
இப்படி விற்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் என்ன என்பதை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது.
 
ஒரு வீட்டில், ஆறு மாத பெண் குழந்தை தொட்டிலில் அயர்ந்து தூங்குவதைப் பார்த்தோம். அதுவும் விற்கப்பட்டுவிட்டது. நடக்கத் தொடங்கியதும், வாங்கிய நபர் வந்து குழந்தையை கொண்டு சென்றுவிடுவார். அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு இன்னும் மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்கள் பச்சை நிற கண்கள் கொண்ட சிறு பாலகர்கள்.
 
மொத்த குடும்பமும் உணவின்றி தவிக்கும் நாட்களும் உண்டு. குழந்தையின் தந்தை குப்பை சேகரிக்கும் தொழிலை செய்து வருகிறார்.
 
'இப்போது, ​​பெரும்பாலான நாட்களில், என்னால் பணம் சம்பாதிக்க முடியவில்லை. நான் வேலை செய்யும்போது, ​​ஆறு அல்லது ஏழு ரொட்டித் துண்டுகளை வாங்கி, அவற்றைப் பகிர்ந்து கொள்கிறோம்' என்று அவர் எங்களிடம் கூறினார்.
 
'எங்கள் மகளை விற்கும் என் முடிவால் என் மனைவி மிகவும் மனமுடைந்துவிட்டார். உடன்படவில்லை. ஆனால் உதவி செய்ய யாருமில்லை. வேறு வழியும் இல்லை.'
 
கோபமும் விரக்தியும் கலந்த அவரது மனைவியின் பார்வையை என்னால் மறக்கவே முடியாது.
 
குழந்தைக்காக அவர்கள் பெறும் பணம் அவர்கள் உயிர்வாழ உதவும். மற்ற குழந்தைகளுக்கு உணவு வாங்கப் பயன்படும். எல்லாம் சில மாதங்களுக்கு மட்டுமே.
 
நாங்கள் புறப்படும்போது மேலும் சில பெண்கள் எங்களிடம் வந்தார்கள். பணத்துக்காக தங்கள் குழந்தைகளை அங்கேயே விற்பதற்குத் தயாராக இருந்தார்கள்.
 
இவ்வளவு குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
 
எங்களிடம் உள்ள தகவலுடன் UNICEF அமைப்பைத் தொடர்பு கொண்டோம். இந்த குடும்பங்களை அணுகி உதவ முயற்சிப்பதாக அவர்கள் எங்களிடம் கூறியுள்ளனர்.
 
வெளிநாட்டு நிதி உதவிகள்தான் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை இதுவரை இயக்கியது. கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் பொறுப்பேற்றதும் நிதி உதவிகள் முடக்கப்பட்டன. அதனால், அனைத்து பொதுச் செலவுகள், அரசு ஊழியர்களின் சம்பளம், அரசின் நிதியுதவியுடன் கூடிய வளர்ச்சிப் பணிகள் என எதற்கும் பணமில்லை. அப்படியே கிடக்கின்றன.
 
பொருளாதார நிலையின் அடிமட்டத்தில் இருப்போருக்கு ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பே பெரும் நெருக்கடி தொடங்கிவிட்டது.
 
மனித உரிமைகள் மீதான உத்தரவாதமும் கிடைக்காமல், எப்படிச் செலவுகள் செய்யப்படும் என்பது தெரியாமல் தாலிபன்களுக்கு பணம் கொடுப்பது ஆபத்தானது. ஆனால் உலக நாடுகளின் அந்தத் தயக்கம் ஆப்கானிஸ்தானில் மக்களை மேலும் பட்டினியில் தள்ளுகிறது. உதவிகள் ஏதும் இல்லாமல், லட்சக் கணக்கான மக்கள் குளிர்காலத்தைக் கடந்துவர முடியாது என்பதையே ஹெராட்டில் நாங்கள் கண்ட காட்சிகள் உணர்த்துகின்றன.