புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 அக்டோபர் 2021 (08:57 IST)

’புனித் உடற்பயிற்சிக்கு முன்னோடி’... உடற்பயிற்சியின் போதே மரணமடைந்த சோகம்

கன்னடப் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவருமான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் பெங்களூருவில் காலமானார். 

 
புனித் ராஜ்குமார் நேற்று காலையில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கிவிழுந்தார். உடனடியாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். கொண்டுசெல்லும் வழியிலும் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. விக்ரம் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  
 
கன்னடத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜ்குமார் - பர்வதம்மா தம்பதியின் ஐந்தாவது மற்றும் இளைய மகனான புனித் ராஜ்குமார் 1975 மார்ச் 17ஆம் தேதி சென்னையில் பிறந்தார். ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே பிரேமதா கனிகே படத்தில் புனித் தோன்றியிருக்கிறார்.
 
2002 ஆம் ஆண்டிலிருந்து கதாநாயகனாக நடித்துவரும் புனித்தின் முதல் படமான அப்பு அவருக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது. தனது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களுக்காக சமூக வலைதளங்களில் பெரிதும் அறியப்பட்டவர் புனித். ஆனால், உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது அவரது ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. 
புனித் ராஜ்குமார் இதுவரை 29 திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னட திரையுலகில் அதிக சம்பளம் பெற்ற ஒரு நடிகர் அவர். கோடீஸ்வரர் நிகழ்ச்சியை கன்னடத்தில் தொகுத்து வழங்கியவர். உடல் உறுதியில் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர் அவர். 
 
இவரது மரணத்திற்கு பல அரசியல் தலைவர்கள், சக நடிகர்கள், விளையாட்டுத் துறையை சேர்ந்தவர்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். மிக இளம் வயதில் அவர் உலகைவிட்டு சென்றுவிட்டார் எனவும் பலர் தங்களின் துயரத்தை பதிவு செய்து வருகின்றனர்.