வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2022 (15:16 IST)

ஜெ. மரணம்: ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் அதிரவைக்கும் தகவல்கள்!

ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கூறப்பட்டுள்ளன.


ஜெயலலிதா இறந்த நேரம் 5.12.2016 இரவு 11.30 மணி என்று மருத்துவமனை கூறும் நிலையில், அதற்கு முந்தைய நாளான 4.12.2016 அன்று மதியம் 3-3:50க்குள் அவர் இறந்துவிட்டதாக சாட்சிகள் கூறுவதாக நீதிபதி ஆறுமுகசாமி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மயங்கி விழுந்த ஜெயலலிதா
ஜெயலலிதா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நாளன்று அவர் முதல் மாடியில் உள்ள தனது அறையின் குளியலறையில் இருந்து திரும்பி படுக்கையை அடைந்தபோது மயங்கி விழுந்தார். அப்போது அங்கிருந்த சசிகலா உள்ளிட்டோர் அவரைத் தாங்கிப் பிடித்தனர்.

ஜெயலலிதா மயக்கமடைந்த நிலையிலேயே அவரது போயஸ் கார்டன் வீட்டில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் மயக்கமடைந்த பின்னர் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் சசிகலாவால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவப் பணியாளர்கள் உடனடியாக மறைந்த முதல்வருக்கு மாஸ்க் மூலம் ஆக்சிஜன் வழங்கி முதலுதவி அளித்தனர். சிறிதும் தாமதிக்காமல், மயங்கி விழுந்த முதல்வரை உடனடியாக ஆம்புலன்சில் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்நோயாளியாக அனுமதித்தனர். முதல்கட்ட நோயறிதலுக்கு பின் அவர் ஐ.சி.யூ-வுக்கு மாற்றப்பட்டபோது, ஸ்ட்ரெச்சரில் இருந்த அவருக்கு சுயநினைவு வந்தது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சசிகலாவின் உறவினர்களாலேயே அறைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன என்றும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் மீண்டும் இணைந்த பிறகு அவர்களுக்கு இடையிலான உறவு சுமூகமாக இல்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. 

'கடைசி மூச்சு வரை நடக்காத ஆஞ்சியோ அறுவை சிகிச்சை'

ஜெயலலிதாவுக்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு, ஹைப்போ தைராடிசம், நாள்பட்ட வயிற்றுப்போக்குடன் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி இருந்ததாக சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் மூலம் அறியப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் இதயத்தில் வெஜிடேசன், பெர்ஃபொரேசன் மற்றும் டயஸ்டோலிக் டிஸ்பரேஷன் ஆகியவற்றுக்காக பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், மருத்துவர் சமின் ஷர்மா ஆகியோர் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். ஆனால் அவரது கடைசி மூச்சு வரை ஏன் நடக்கவில்லை என்கிறது இந்த அறிக்கை கேள்வி எழுப்புகிறது. 

வி.கே. சசிகலாவை விசாரிக்க பரிந்துரை

ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, நால்வர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

அப்போலோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டியை விசாரிப்பது தொடர்பாக அரசு முடிவு செய்யலாம் என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவர் எந்த நேரத்திலும் டிஸ்சர்ஜ் செய்யப்படலாம் என வெளியிடப்பட்ட அறிக்கை பொய்யானது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.