புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 26 அக்டோபர் 2024 (17:52 IST)

பாபநாசம் பட பாணியில் கொலை செய்துவிட்டு தப்ப முயற்சி - காவல்துறை துப்பு துலக்கியது எப்படி?

Nagpur Murder Case

பாபநாசம் பட பாணியில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கொலை செய்துவிட்டு அதனை மறைக்க ஒருவர் முயற்சி செய்துள்ளார். நாக்பூரில் காதலித்த பெண்ணை கொன்று புதைத்து, அந்த இடத்தை சிமெண்ட் வைத்து அந்த நபர் அடைத்துள்ளார் என்று காவல்துறை கூறியுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர் ஆவார்.

 

 

நாக்பூரில் உள்ள பெல்டரோடி காவல்துறையினர் குற்றம்சுமத்தப்பட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

 

நடந்தது என்ன?
 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஜோத்ஸ்னா பிரகாஷ் அக்ரே (32), குற்றம்சாட்டப்பட்டுள்ளவரின் பெயர் அஜய் வான்கடே (34). ஆகஸ்ட் 28-ஆம் தேதி அன்று ஜோத்ஸ்னா காணாமல் போனார். அவர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக 55 நாட்களுக்குப் பிறகு காவல்துறை கூறியுள்ளது.

 

புட்டிபோரி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தின் அருகே அமைந்துள்ள புதர் மண்டிய பகுதியில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் அந்த பெண்ணின் உடலை புதைத்திருக்கிறார் என்று காவல்துறை கூறியுள்ளது. பெரிய குழி ஒன்றைத் தோண்டி அதில் அந்த பெண்ணின் உடல் போடப்பட்டுள்ளாது. அதன் மேல் ப்ளாஸ்டிக் விரிக்கப்பட்டு அதில் கற்கள் கொட்டப்பட்டிருக்கிறது. இறுதியில் சிமெண்ட் கலவை கொண்டு அந்த குழி மூடப்பட்டுள்ளது.

 

ஜோத்ஸ்னாவின் உடலை கைப்பற்றிய காவல்துறை உடற்கூறாய்வுக்கு அனுப்பியுள்ளது. காவல்துறை இந்த வழக்கில் துப்பு துலக்கியது எப்படி?

 

ஜோத்ஸ்னா உடல் எப்படி கிடைத்தது?
 

காவல்துறை துணை ஆணையர் ராஷ்மிதா ராவ் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த கொலை குறித்த முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். 32 வயதான ஜோத்ஸ்னா அக்ரே, கலமேஷ்வர் பகுதியைச் சேர்ந்தவர். நாக்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த ஜோத்ஸ்னா எம்.ஐ.டி.சியில் அமைந்திருக்கும் டி.வி.எஸ். நிறுவன ஷோரூமில் அவர் பணியாற்றி வந்துள்ளார்.

 

ஆகஸ்ட் 28-ஆம் தேதி அன்று மாலை 8.30 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் அடுத்த நாள் காலை வரை வீடு திரும்பவில்லை. ஜோத்ஸ்னாவின் சகோதரர் ரித்தேஸ்வர் அக்ரே தன்னுடைய சகோதரியை காணவில்லை என்று பெல்டரோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அவரின் புகார் அடிப்படையில் காணாமல் போன நபர் குறித்து வழக்கை பதிவு செய்தது காவல் நிலையம். அதன் பிறகு காவல்துறையினர் ஜோத்ஸ்னாவின் செல்போன் இருக்கும் இடத்தை கண்டறிந்தது. அவருடைய போன் ஐதராபாத்தில் கண்டறியப்பட்டது.

 

பல நாட்கள் ஆன பிறகும் தன்னுடைய சகோதரியை காணவில்லை என்ற காரணத்தால் ரித்தேஸ்வர் மீண்டும் காவலர்களை நாடினார். அப்போது தன்னுடைய சகோதரி கொல்லப்பட்டிருக்கலாம் என்று தன்னுடைய அச்சத்தை வெளிப்படுத்தினார்.

 

இதனைத் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியது காவல்துறை. ஜோத்ஸ்னாவின் போனிற்கு அழைப்பு விடுத்த போது கனரக வாகன ஓட்டுநர் அந்த அழைப்பிற்கு பதில் அளித்தார். தன்னுடைய வாகனத்தில் அந்த செல்போன் கிடந்தது என்றும் தெரிவித்திருக்கிறார். பெல்டரோடி காவல் நிலையத்திற்கு நேரில் வருமாறு அவரிடம் கூற நேரில் வந்து ஜோத்ஸ்னாவின் போனை காவல்துறையிடம் கொடுத்துள்ளார் அவர்.

 

காவல்துறையினர் அதில் வந்த அழைப்புகள் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

 

பாபநாசம் படத்தில் வருவது போன்று அவருடைய போனை லாரியில் வீசி, காவல்துறையினரின் கவனம் திசை திருப்பப்பட்டுள்ளது. போனை வைத்து விசாரிக்க துவங்கும் போது அந்த நபர் பயணித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு பிம்பம் உருவாகும்.

 

அழைப்புகளை ஆய்வு செய்ததில் அஜய் வான்கடே மற்றும் ஜோத்ஸ்னாவுக்கு இடையேயான தொடர் அழைப்புகள் கண்டறியப்பட்டன. பணப் பரிமாற்றம் நடந்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.

 

விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறை
 

காணாமல் போன ஜோத்ஸ்னா மற்றும் குற்றவாளியும் ஒரே இடத்தில் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையின் போது காவல்துறையினர் பேசா சவுக் பகுதியில் இருந்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அங்கே சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் ஜோத்ஸ்னாவின் சடலம் இடமாற்றம் செய்யப்பட்டது சி.சி.டி.வி. காட்சியில் பதிவானது.

 

காரின் உரிமையாளர் யார் என்று தேடும் போது அது அஜய்யின் கார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஜயை தேடும் பணியை தீவிரமாக்கியது காவல்துறை.

 

இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்கள் கழித்து புனேவில் நீரிழிவு நோய்க்காக அஜய் சிகிச்சை எடுத்து வந்தார். மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை அவரை விடுவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. ஆனால் அஜய் அங்கிருந்து உடனே தப்பித்துவிட்டார்.

 

நாக்பூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறும் முயற்சியில் அஜய் ஈடுபடவே, காவல்துறையின் சந்தேகம் வலுவடைந்தது. நாக்பூர் நீதிமன்றம் அஜயின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்துவிட்டது.

 

அக்டோபர் 18-ஆம் தேதி அன்று அஜய் காவல்துறையிடம் சரணடைந்தார். பிறகு ஜோத்ஸ்னா கொலை செய்ததையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அஜயின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு ரயில்வே தண்டவாளத்தின் அருகே புதைக்கப்பட்டிருந்த ஜோத்ஸ்னாவின் உடலை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

 

ஜோத்ஸ்னா கொலை பற்றி காவல்துறை கூறுவது என்ன?
 

நாக்பூர் முனிசிபல் கார்ப்பரேஷனில் பணியாற்றிய முன்னாள் அதிகாரியின் மகன் அஜய். இந்திய ராணுவத்தில் கடந்த 12 ஆண்டுகளாக மருந்தாளராக அவர் இருந்து வருகிறார். தற்போது நாகலாந்தில் அவர் பணியில் இருக்கிறார்.

 

ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தான அஜய் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொள்ள பெண் தேடி வந்தார். அப்போதுதான் திருமண இணையம் மூலமாக ஜோத்ஸ்னா அவருக்கு பரிச்சயமாகியுள்ளார்.

 

ஜோத்ஸ்னாவும் விவாகரத்தானவர். பெண் பார்க்கும் நிகழ்வானது ஜோத்ஸ்னா வீட்டில் நடைபெற்றது. அந்த திருமணம் சில காரணங்களுக்காக நடைபெறாமல் போனது. ஆனால் இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.

 

இதற்கிடையில் அஜய்க்கு மே மாதம் மூன்றாவது முறையாக திருமணம் நடைபெற்றது. ஜோத்ஸ்னா காணாமல் போன நாளனறும் கூட அஜயுடன் பேசியுள்ளார். அஜயை பார்ப்பதற்காகவே அவர் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

 

ஜோத்ஸ்னா மட்டுமின்றி வேறு சில பெண்களுடனும் அஜய் தொடர்பில் இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது இந்த நடத்தையே கொலைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

 

ஜோத்ஸ்னா கொலைக்கான உண்மையான காரணம் என்ன? அவர் எவ்வாறு கொல்லப்பட்டார்? என்பது குறித்து தொடர்ச்சியாக விசாரணை செய்து வருகிறது.

 

இதுவரை நடைபெற்ற விசாரணையில் அது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்று துணை ஆணையர் ராஷ்மிதா ராவ் கூறுகிறார்.

 

நீரிவு நோயால் அவதிப்பட்டு வரும் அஜய் எந்த நேரத்திலும் சர்க்கரை அளவு அதிகரித்து மயங்கிவிட வாய்ப்புகள் உண்டு என்று கூறுகின்றனர் காவல்துறையினர். இதனால், விசாரணையை மேற்கொள்வதில் சில சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

ஜோத்ஸ்னா கொலைக்கு முன்னதாக பாபநாசம் படத்தை எத்தனை முறை பார்த்தீர்கள்? பாபநாசம் படத்தைப் பார்த்தே இந்த கொலையை செய்தீர்களா? என்பன போன்ற கேள்விகளை கேட்கவிருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

 

ஆதாரங்களை அழிப்பதற்காக பெரிய குழி தோண்டி அதில் அந்த பெண்ணின் உடலை அஜய் போட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால் இந்த கொலையை அவர் தனியாக செய்தாரா அல்லது யாராவது அவருக்கு உதவினார்களா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு