திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2024 (16:24 IST)

அம்பானி vs ஈலோன் மஸ்க்: இந்திய செயற்கைக்கோள் சந்தையைப் பிடிக்க நடக்கும் போர்

elon musk vs ambani

உலகின் இரு பெரும் பணக்காரர்களான ஈலோன் மஸ்க் மற்றும் முகேஷ் அம்பானிக்கு இடையே ஒரு கடும் போட்டி நிலவி வருகிறது.

 

 

இந்தியாவின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சந்தையை யார் கைப்பற்றுவது என்பதுதான் அந்தப் போட்டி.

 

இந்தப் போட்டி ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக இருந்து வந்தது. ஆனால், பிராட்பேண்ட் சேவைக்கான செயற்கைக்கோள் அலைக்கற்றை, ஏலத்தின் மூலமாக இல்லாமல் நிர்வாக ரீதியாக ஒதுக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்த பிறகு, இந்தப் போர் மேலும் சூடுபிடித்துள்ளது.

 

இதற்கு முன்னர், அம்பானியை ஆதரிக்கும் வகையிலான ஏல முறையை ஈலோன் மஸ்க் விமர்சித்திருந்தார். செயற்கைக்கோள் பிராட்பேண்ட் தொழில்நுட்பம், ஒரு செயற்கைக்கோளின் பரப்பு முழுதும் இணைய சேவையை வழங்குகிறது.

 

தொலைதூர இடங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் இது நம்பகமான தேர்வாக இருக்கிறது. தொலைபேசி, கேபிள் போன்ற பாரம்பரிய தகவல் தொடர்பு சேவைகள் அடைய முடியாத இடங்களிலும் சேட்டிலைட் சேவையைப் பெற முடியும். இது டிஜிட்டல் சேவைகள் சென்று சேராத இடங்களையும் இணைக்க உதவுகிறது.

 

இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனம் இந்த அலைக்கற்றைக்கான விலையை இன்னும் அறிவிக்கவில்லை. வணிகரீதியான செயற்கைக்கோள் இணைய சேவைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

 

இருப்பினும், இந்தியாவில் உள்ள செயற்கைக்கோள் இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டளவில் 20 லட்சத்தை எட்டும் என்று கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஆர்.ஏ. (ICRA) தெரிவித்துள்ளது.

 

கடும் போட்டி
 

இந்தச் சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தலைமையில் சுமார் அரை டஜன் முக்கிய பங்குதாரர்கள் இந்தப் போட்டியில் உள்ளனர்.

 

தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்த அலைக்கற்றை ஏலங்களில் பல நூறு கோடிகளை முதலீடு செய்துள்ள ரிலையன்ஸ் ஜியோ, இப்போது லக்சம்பர்க்கை தளமாகக் கொண்ட முன்னணி செயற்கைக்கோள் சேவை வழங்குநரான SES அஸ்ட்ராவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

 

ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், பூமியின் மேற்பரப்பில் இருந்து 160 கி.மீ முதல் 1,000 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்ட பூமியின் தாழ்வான சுற்றுப்பாதை (low-Earth orbit - LEO) செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி அதிவிரைவு இணைய சேவையை வழங்குகிறது.

 

ஆனால், எஸ்.இ.எஸ் நிறுவனம் பூமியின் நடுப்பகுதி சுற்றுப்பாதை (medium-Earth orbit - MEO) செயற்கைக் கோள்களை அதிக உயரத்தில் இயக்குகிறது. இது செலவு குறைந்த அமைப்பு. பூமியிலுள்ள பயனர்கள் செயற்கைக்கோள் சிக்னல்களை பெற்று, அதை இணைய டேட்டாவாக மாற்றுகிறார்கள்.

 

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் பூமியின் சுற்றுப்பாதையில் 6,419 செயற்கைக் கோள்களைக் கொண்டுள்ளது. ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு 100 நாடுகளில் 40 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். ஈலோன் மஸ்க் 2021 முதல் இந்தியாவில் இணைய சேவைகளைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் ஒழுங்குமுறைத் தடைகள் அவரது திட்டத்தைத் தாமதப்படுத்தியது.

 

இம்முறை அவரது நிறுவனம் இந்தியாவுக்குள் நுழைந்தால், அந்நிய முதலீட்டை ஈர்க்கும் பிரதமர் நரேந்திர மோதியின் முயற்சிகளுக்கு அது ஊக்கமளிக்கும் எனப் பலர் கூறுகின்றனர்.

 

தனது அரசின் கொள்கைகள் அம்பானி போன்ற பெரும் தொழிலதிபர்களுக்குச் சாதகமாக உள்ளதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் மோதி, வணிகங்களுக்குச் சாதகமானவர் என்ற பிம்பத்தை மேம்படுத்தவும் அது உதவும்.

 

முகேஷ் அம்பானி vs ஈலோன் மஸ்க்

 

கடந்த காலங்களில் ஏலங்கள் மூலம் லாபம் பார்த்த இந்திய அரசு, இந்த முறை செயற்கைக்கோள் அலைக்கற்றையை நிர்வாக ரீதியாக ஒதுக்க முடிவெடுத்திருக்கிறது. இது சர்வதேச விதிமுறைகளுடன் ஒத்துப் போவதாக இந்திய அரசு கூறுகிறது.

 

செயற்கைக்கோள் அலைக்கற்றை பொதுவாக ஏலத்தில் ஒதுக்கப்படுவதில்லை, ஏனெனில் அதற்கு ஆகும் செலவுகள் நிதி நியாயத்தை, முதலீட்டை பாதிக்கலாம், என்கிறார் கவுன்டர்பாயின்ட் ரிசர்ச்சின் தொழில்நுட்ப ஆய்வாளர் கேரத் ஓவன்.

 

இதற்கு நேர்மாறாக, நிர்வாக ஒதுக்கீடு ‘தகுதியுள்ள’ போட்டியாளர்களிடையே அலைக்கற்றை நியாயமான முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்கிறது. இது ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்திய பந்தயத்தில் நுழைவதற்கான வாய்ப்பை வழங்கும்.

 

ஆனால், செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை நேரடியாக மக்களுக்கு வழங்குவது குறித்து இந்தியாவில் தெளிவான சட்ட விதிகள் இல்லை. அதனால் நியாயமான போட்டியை உறுதிப்படுத்த ஏலம் அவசியம் என்று அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கூறுகிறது.

 

ரிலையன்ஸ் நிறுவனம் அக்டோபர் மாதம் இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டாளருக்கு எழுதிய கடிதங்களை பிபிசி பார்த்தது. அதில் ரிலையன்ஸ் நிறுவனம் மீண்டும் ‘செயற்கைக்கோள் மற்றும் தரைவழி இணைய சேவைகளுக்கு இடையே ஒரு சமமான போட்டியை’ உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியது.

 

"செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களில் சமீபத்திய முன்னேற்றங்கள், செயற்கைக்கோள் மற்றும் தரைவழி நெட்வொர்க்குகளுக்கு இடையே உள்ள எல்லையைப் பெருமளவு மங்கவைத்துவிட்டதாக," அந்தக் கடிதங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும், "செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவைகள் இனி தரைவழி நெட்வொர்க்குகள் சென்றடையாத பகுதிகளுக்கு மட்டுமானவையல்ல," என்றும் அந்நிறுவனம் கூறியது.

 

அலைக்கற்றை ஒதுக்கீடு, இந்தியாவின் தொலைத்தொடர்பு சட்டங்களின் கீழ் ஏலங்கள் மூலம் செய்யப்படுகிறது. ‘பொதுநலன், அரசுச் செயல்பாடுகள், தொழில்நுட்பம், அல்லது பொருளாதாரக் காரணங்களால் ஏலம் தடைபடும்’ சந்தர்ப்பங்களில் மட்டுமே நிர்வாக ஒதுக்கீடு அனுமதிக்கப்படுகிறது.

 

தனது எக்ஸ் பக்கத்தில், ஈலோன் மஸ்க், அலைக்கற்றையில் "செயற்கைக் கோள்களுக்கான பகிர்வு ஸ்பெக்ட்ரம் என ஐ.டி.யூ-வால் நீண்டகாலத்திற்கு முன்பே நியமிக்கப்பட்டது" என்று சுட்டிக்காட்டினார். சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union - ITU) என்பது டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான ஐ.நா., அமைப்பு. இது உலகளாவிய விதிமுறைகளை அமைக்கிறது. இந்தியா இதில் உறுப்பினராக உள்ளது.

 

முகேஷ் அம்பானி இந்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய அரசாங்கத்தை வற்புறுத்துவதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்தபோது, ஈலோன் மஸ்க் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவுக்கு இப்படிப் பதிலளித்தார்: “நான் [திரு அம்பானியை] அழைத்து, இந்திய மக்களுக்கு இணைய சேவைகளை வழங்கும் போட்டியில் ஸ்டார்லிங்கை அனுமதிப்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருக்குமா என்று கேட்கப் போகிறேன்.”

 

நிர்வாக விலை நிர்ணய முறைக்கு அம்பானியின் எதிர்ப்பு ஒரு மூலோபாய நன்மையில் இருந்து உருவாகலாம் என்று ஓவன் கூறுகிறார். ஸ்டார்லிங்கை இந்திய சந்தையில் இருந்து விலக்கி வைக்க ஏலத்தைப் பயன்படுத்தி, ‘ஈலோன் மஸ்கை விஞ்சுவதற்கு’ அம்பானி தயாராக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

 

குறைந்த விலையில் செயற்கைக்கோள் இன்டர்நெட் தரப்போவது யார்?

 

ஆனால் அம்பானி மட்டும் ஏல வழிமுறையை ஆதரிக்கவில்லை.

 

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல், நகர்ப்புற, உயர்மட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட நிறுவனங்கள் ‘தொலைத்தொடர்பு உரிமங்களை எடுத்து, மற்றவர்களைப் போல அலைக்கற்றைகளை வாங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

 

இந்தியாவின் இரண்டாவது பெரிய வயர்லெஸ் ஆபரேட்டரான மிட்டல், அம்பானியுடன் சேர்ந்து, நாட்டின் டெலிகாம் சந்தையில் 80 சதவீதத்தைக் கட்டுப்படுத்துகிறார்.

 

இத்தகைய எதிர்ப்பானது, "நீண்ட கால அச்சுறுத்தல்களாகக் கருதப்படும் சர்வதேச போட்டியாளர்களுக்குச் செலவுகளை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தற்காப்பு நடவடிக்கை" என்கிறார் தொலைத்தொடர்பு நிபுணர் மகேஷ் உப்பல்.

 

"உடனடிப் போட்டி இல்லை என்றாலும், செயற்கைக்கோள் தொழில்நுட்பங்கள் விரைவாக முன்னேறி வருகின்றன. [இந்தியாவில்] பெரிய தரைவழி இணைய வணிகங்களைக் கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்கள் ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் செயற்கைக்கோள்கள் தொழில்நுட்பம் விரைவில் அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாறக்கூடும் என்று அஞ்சுகின்றனர்,” என்கிறார் அவர்.

 

செயற்கைக்கோள் இணைய சந்தை இந்தியாவில் பரவலாக வளரும் என்ற எதிர்பார்ப்பு, இந்தப் போட்டியை இயக்குகிறது. இந்தியாவின் 140 கோடி மக்களில் ஏறக்குறைய 40% பேருக்கு இன்னமும் இணையம் சென்றடையவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் என்று இ.ஒய்-பார்த்தெனன் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

சீனா கிட்டத்தட்ட 109 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 75.1 கோடி பேர்தான் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவைவிட சீனா 34 கோடி இணைய பயனர்களை அதிகமாகக் கொண்டுள்ளது. உலகளாவிய ஆன்லைன் போக்குகளைக் கண்காணிக்கும் DataReportal நிறுவனத்தின் அறிக்கை இதைக் கூறுகிறது.

 

இந்தியாவின் இணையப் பரவல் விகிதம் இன்னும் உலகளாவிய சராசரியான 66.2%-ஐ விடப் பின்தங்கியுள்ளது. ஆனால் சமீபத்திய ஆய்வுகள், இந்தியா இந்த இடைவெளியைச் சரிசெய்து வருவதாகக் கூறுகின்றன.

 

சரியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டால், செயற்கைக்கோள் பிராட்பேண்ட் இந்த இடைவெளியைக் குறைக்க உதவும். அன்றாடப் பொருட்களை இணையத்துடன் இணைக்கும் தொழில்நுட்பமான இன்டர்நெட்-ஆஃப் திங்ஸ் (IoT) இந்தியாவில் காலூன்றவும் இது உதவலாம். இந்தத் தொழில்நுட்பம் பொருட்கள் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ள உதவுகிறது.

 

இந்தியாவில் விலை நிர்ணயம் முக்கியமானதாக இருக்கும். உலகிலேயே மொபைல் டேட்டா மலிவாகக் கிடைப்பது இந்தியாவில்தான். ஒரு ஜிகாபைட்டுக்கு வெறும் 10 ரூபாய் (12 cents) என்று மோதி கூறுகிறார்.

 

"இந்திய இணைய சேவை வழங்குநர்களுக்கு இடையே விலைப் போர் தவிர்க்க முடியாதது. ஈலோன் மஸ்க்கிடம் பெரும் செல்வம் உள்ளது. இந்திய சந்தையில் காலூன்றுவதற்காக சில இடங்களில் அவரால் ஒரு வருட இலவச சேவைகளைக்கூட வழங்க முடியும்," என்கிறார் தொழில்நுட்ப ஆய்வாளர் பிரசாந்தா கே ராய். ஸ்டார்லிங்க் நிறுவனம் ஏற்கெனவே கென்யா, மற்றும் தென்னாப்பிரிக்காவில் இணைய விலைகளைக் குறைத்துள்ளது.

 

செயற்கைக்கோள் இணையத்தின் விலை என்ன?

 

ஆனால், அது அவ்வளவு எளிதாக இருக்காது. 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஸ்டார்லிங்கின் அதிக விலைகள் அரசாங்க மானியங்கள் இல்லாமல் போட்டியிடுவதைக் கடினமாக்கும் என்று EY-பார்த்தெனன் குறிப்பிடுகிறது. இந்தியாவின் முக்கிய பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களைவிட ஸ்டார்லிங்கின் விலை கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம்.

 

பல எல்.இ.ஓ (LEO) செயற்கைக்கோள்கள் - ஸ்டார்லிங்க் செயல்படும் வகை - எம்.இ.ஓ. (MEO) செயற்கைக்கோள்களை விட ஸ்டார்லிங்க் பயன்படுத்தும் தாழ்வான சுற்றுப்பாதை (LEO) செயற்கைக்கோள்கள் மூலம் உலகளாவிய இணைய கவரேஜ் வழங்க, அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் தேவைப்படும்.

 

அதாவது SES நிறுவனம் பயன்படுத்தும் நடுப்பகுதி சுற்றுப்பாதை (MEO) செயற்கைக்கோள்களைவிட அதிக எண்ணிக்கையில் செயற்கைக் கோள்கள் தேவைப்படும்.

 

இது செயற்கைக்கோள் ஏவுதல் மற்றும் பராமரிப்பு செலவுகளை அதிகரிக்கும். அதுபோல் இந்திய இணைய நிறுவனங்களில் சில அச்சங்கள் ஆதாரமற்றவையாக இருக்கலாம்.

 

"தரைவழி இணைய சேவைகளை வழங்கவே முடியாது என்றாலொழிய இணைய நிறுவனங்கள் ஒருபோதும் முற்றிலுமாகச் செயற்கைக் கோளுக்கு மாறப் போவதில்லை. மக்கள்தொகை குறைவாக உள்ள பகுதிகளைத் தவிர தரைவழி நெட்வொர்க்குகள் செயற்கைக்கோளைவிட எப்போதும் குறைந்த விலையில்தான் இருக்கும்," என்று ஓவன் கூறுகிறார்.

 

ஈலோன் மஸ்க் செயற்கைக்கோள் இணைய சேவையில் முதல் போட்டியாளர் என்ற நன்மை இருக்கலாம். ஆனால் "செயற்கைக்கோள் இணைய சந்தைகள் மிக மெதுவாகவே வளர்ச்சியடைகின்றன,” என்கிறார் அவர்.

 

விண்வெளி இணைய சந்தையைக் கையகப்படுத்த உலகின் இரு பெரும் பணக்காரர்களுக்கு இடையிலான போர் துவங்கியுள்ளது.