1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : சனி, 22 ஜனவரி 2022 (09:50 IST)

அமெரிக்காவில் 5ஜி தொழில்நுட்பம் ஏன் விமானங்களுக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது?

அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏடி&டி மற்றும் வெரிசோன் ஆகியவை விமான நிலையங்களில் 5ஜி சேவை விரிவாக்கத்தை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டுள்ளன.
 
இதற்கு முன்பாக இரண்டு முறை இது ஒத்திவைக்கப்பட்டது. தற்போதும் இது நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பத்து முன்னணி விமான நிறுவனங்கள் இந்த புதிய தொழில்நுட்பத்தால் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாகலாம் என்று கூறுகின்றன.
 
5ஜி என்றால் என்ன, அது எப்படி அமெரிக்க விமானப் பயணத்தை சீர்குலைக்கும்?
5ஜி என்பது தொலைத்தொடர்பு இணைய இணைப்பின் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம். இது, மிக விரைவாக தரவிறக்க, பதிவேற்ற வழி செய்கிறது.
 
மேலும் ஒரே நேரத்தில் அதிக சாதனங்கள் தொலைத் தொடர்பு இணையத்தை அணுக அனுமதிக்கிறது.
இதைச் செய்ய, இது ரேடியோ சிக்னல்களை நம்பியுள்ளது. அமெரிக்காவில், 5ஜி க்கு பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசைகள் C-Band எனப்படும் அலைவரிசை பகுதியைச் சேர்ந்தவை.
 
 
இந்த 5ஜி அலைவரிசையும், விமானங்களில் பயன்படுத்தப்படும் ரேடியோ அல்டிமீட்டர்களின் அலைவரிசையும் கிட்டத்தட்ட ஒரே எண்களைக் கொண்டுள்ளன. இதனால் விமானம் தரையிறங்கும் போது பல சிக்கல்கள் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
 
ரேடியோ அல்டிமீட்டர் என்பது தரையில் இருந்து விமானம் உள்ள உயரத்தை அளவிட்டு பாதுகாப்பான முறையில் விமானத்தை தரை இறக்க உதவும் கருவியாகும்.
 
இதனால் விமானங்களுக்கு ஏற்படும் ஆபத்து எவ்வளவு தீவிரமானது?
2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், "இந்த பிரச்னை தீர்க்கப்படவில்லை என்றால் பல விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் சாத்தியம் உள்ளது" என்று எச்சரித்தது ரேடியோ டெக்னிகல் கமிஷன் ஃபார் ஏரோனாடிக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம். விமானப் போக்குவரத்து சிக்கல்களில் தீர்வுகளை உருவாக்கும் பணியை மேற்கொண்டுள்ள நிறுவனம் இது.
 
மிக சமீபத்தில், அமெரிக்க விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பான FAA, கூறும்போது 5ஜி தொழில்நுட்ப இடர்பாடு, போயிங் 787 ட்ரீம்லைனர் போன்ற விமானங்களில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று எச்சரித்தது.
 
குறிப்பாக தரையிறங்கும்போது விமானத்தின் வேகத்தைக் குறைப்பதில் இது சிக்கல்களை ஏற்படுத்தலாம். இதனால் விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி இறங்க நேரிடலாம் என்று கூறியது.
 
இடர்ப்பாடுகள் ஏற்படும்போது எப்படி பாதுகாப்பாக விமானத்தை தரை இறங்கச் செய்வது ?
5ஜி அலைவரிசை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது அதனால் இடர்ப்பாடு ஏற்படும் அபாயம் உள்ள சூழ்நிலைகளில் ரேடியோ அல்டிமீட்டர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
 
ஆனால், எல்லா நேரத்திலும் அல்டிமீட்டர் பயன்பாட்டை கைவிட முடியாது. குறிப்பாக விமான ஓடு தளத்தில் அதிக பனிமூட்டம் இருக்கக் கூடிய சூழலில் விமான ஓடுதளம் கண்களுக்கு தெரியாது. இதனால் பாதுகாப்பாக விமானத்தை தரை இறக்குவதில் சிக்கல் ஏற்படும். அதுபோன்ற தருணங்களில் ரேடியோ அல்டிமீட்டர்களின் தேவை இன்றியமையாததாக இருக்கும் என்கிறார்கள்.
 
10 முன்னணி விமான நிறுவனங்களை உள்ளடக்கிய Airlines for America, என்ற அமைப்பு கூறுகையில் மோசமான வானிலையின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் தரை இறங்க பல பிரச்னைகளை சந்திக்கக்கூடும் என்கிறது.
 
இது போன்ற கட்டுப்பாடுகளால் அமெரிக்க விமானப்படை விமானங்கள்கூட "பயன்படுத்த முடியாததாக" போகும் என்கிறது அந்த அமைப்பு.
 
5ஜி பயன்படுத்தும் பிற நாடுகள் நிலைமை என்ன?
5ஜி அலைவரிசை தொழில்நுட்பம் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவைப் போல் பிரச்னை பிற நாடுகளில் ஏற்படவில்லை.
 
எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய ஒன்றியத்தில், அமெரிக்காவில் பயன்படுத்தப்பட உள்ள 5ஜி அலைவரிசையின் அளவைவிட குறைத்தே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தொழில்நுட்ப பிரச்னை ஏற்படுவது குறைகிறது. 5ஜி அலைவரிசையைக் கடத்த பயன்படுத்தப்படும் கோபுரங்களுக்கு தேவைப்படும் மின் அழுத்தமும் குறைவாகவே வழங்கப்பட்டு வருகிறது.
 
பிற நாடுகளில் எந்தவித பிரச்னையும் இல்லை என்றாலும் பிரச்னையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
 
குறிப்பாக பிரான்சில், விமான நிலையங்கள் அருகே உள்ள பஃபர் சோன் எனப்படும் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 5ஜி அலைவரிசை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 5ஜி அலைவரிசைக்கு பயன்படுத்தப்படும் ஆன்டெனாக்களும் சாய்வாக பொருத்தப்பட்டுள்ளன.
 
அமெரிக்க அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கை என்ன?
 
இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.
 
FAA அமைப்பு 50 விமான நிலையங்களைச் சுற்றி தற்காலிக "பஃபர் சோன்" எனப்படும் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நிறுவியுள்ளது. ஆனால் இவை பிரான்சில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் மண்டலங்களை விட மிகவும் சிறியவை, மேலும் அமெரிக்க அலைவரிசை கோபுரங்கள் அதிக மின் திறன்களைக் கொண்டு செயல்படும்.
 
அதேபோல் 5ஜி அலைவரிசை தொழில் நுட்பத்துடன் இடர்பாட்டை ஏற்படுத்தாத ரேடியோ அல்டிமீட்டர்களைப் பயன்படுத்தவும் ஏற்பாடு நடந்து வருகிறது. மேலும் ரேடியோ அல்டிமீட்டர்களுக்கு பதிலாக GPS தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம் என்ற ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.
 
ஆனால் இது போன்ற நடவடிக்கைகள் தீர்வாகாது என்று விமான நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. ஒரே வழி, விமான நிலையங்களில் இருந்து இரண்டு மைல்களுக்குள் 5ஜி அலைவரிசை தொழில்நுட்பம் செயல்படுத்தப்படக்கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர்.
 
5ஜி அலைவரிசை தொழில்நுட்ப நிறுவனங்கள் என்ன கூறியுள்ளன?
வெரிசோன் மற்றும் ஏடி&டி ஆகியவை 5ஜி அலைவரிசை தொழில்நுட்ப நிறுவனங்கள், "தற்காலிகமாக" இதை நாங்கள் தாமதபடுத்துகிறோம் என்கிறார்கள்.
 
குறிப்பாக ஏடி&டி நிறுவனம் விமான ஓடு தளங்கள் அருகே கோபுரங்களின் எண்ணிக்கையை குறைவாக வைத்துவிட்டால் எந்த பிரச்னையும் வர வாய்ப்பில்லை என்றும் அதிகமாக தொழில்நுட்ப இடர்பாட்டை ஏற்படுத்தக்கூடிய 5ஜி தொழில்நுட்ப கோபுரங்களை ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இயக்க வேண்டாம் என்றும் முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளது.இதனால் தற்போது எந்தவிதமான பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை.
 
இது சம்பந்தமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் இந்த பிரச்னையால் 10 சதவீத 5ஜி தொழில்நுட்ப கோபுரங்கள் மட்டுமே செயல்படாது என்றார்.
 
வெரிசோன் மற்றும் ஏடி&டி நிறுவனங்கள் ஏற்கனவே இரண்டு முறை 5ஜி வெளியீட்டை ஒத்திவைத்திருந்தன, மேலும் மேலே குறிப்பிட்டுள்ள "பஃபர் சோன்" பகுதிகளில் இதை செயல்படுத்த போவதில்லை என்றும் ஒப்புக்கொண்டன.
 
இரண்டு நிறுவனங்களும் சமீபத்திய இடைநிறுத்தம் குறித்து தங்கள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளன. 5ஜி தொழில்நுட்ப சேவையைத் தொடங்குவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஏடி&டி தெரிவித்துள்ளது.
 
சுமார் 40 நாடுகளில் ஏற்கனவே 5ஜி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
 
கடந்த மாதம் அமெரிக்க வயர்லெஸ் தொழில் அமைப்பான CTIA விமானத் துறையினர் அதிகமான பயத்தை ஏற்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டியது. மேலும் இப்படியே இது தொடர்ந்தால் 5ஜி அறிமுகத்தை தாமதப்படுத்துவது உண்மையான பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்தது.
 
இங்கிலாந்தில் உள்ள நிலைமை என்ன?
இங்கிலாந்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் விமான நிறுவனங்கள் இதைப் பற்றி கவலைப்படவில்லை.
 
டிசம்பரில் வெளியிடப்பட்ட பாதுகாப்பு அறிவிப்பில், சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம்-(CAA) "5ஜி இடர்பாட்டால் விமான அமைப்பின் செயலிழப்பு அல்லது எதிர்பாராத நிகழ்வுகள் எதுவும் இல்லை" என்று கூறியது.
 
"வெவ்வேறு நாடுகளில் நிலைமை வேறுபடும். அந்தந்த நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தை எப்படி நடைமுறைப் படுத்துகிறார்களோ அதை பொருத்து அது அமையும்" என்கிறார்கள்.
 
இந்த பிரச்னையில் மேலும் தரவுகளை சேகரிக்க சர்வதேச அளவில் வேலை செய்ய திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.