உலகை மயக்கிய சாக்லேட்டின் கதை தெரியுமா? – உலக சாக்லேட் தினம்!
இன்று உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சாக்லேட்டை சிறப்பிக்கும் விதமாக உலக சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது.
அழும் சிறு குழந்தைகளை சிரிக்க வைக்கவும், கோபமான காதலியை சாந்தப்படுத்தவும் என பலவகையிலும் இன்று அத்தியாவசியமாகியுள்ள ஒரு திண்பண்டம் சாக்லேட். இன்று பல நூறு வகையாக கடைகளில் விதவிதமான பாக்கெட்டுகளில் விற்கும் சாக்லேட்டுகள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
மனிதன் தோன்றும் காலத்திற்கு முன்பிருந்தே சாக்லேட் செய்ய பயன்படும் ககாவோ (Cacao) தாவரங்கள் பூமியில் முக்கியமாக அமெரிக்க பகுதியில் அதிகமாக விளைந்திருந்தன ஓல்மெக், மாயன்கள், ஆஸ்டெக் மக்கள் என கி.முவில் வாழ்ந்த மக்கள் கூட சாக்லேட் சாப்பிட்டிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம்,. ஆனால் அது இப்போது இருக்கும் சாக்லேட் போல கிடையாது. ககோவா தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் பிசினை ஒரு பானமாக தயாரித்து (கிட்டத்தட்ட தேநீர் போல) ஆதி மக்கள் பருகி வந்தனர். இந்த பானம் அவர்களுக்கு உற்சாகத்தையும், சிறிய அளவிலான போதையையும் அளித்து வந்தது.
16ம் நூற்றாண்டு வரை உலகத்திற்கு சாக்லேட் என்ற பொருளை அவ்வளவாக தெரியாது. 16ம் நூற்றாண்டில் ஸ்பானியர்கள் லத்தீன் அமெரிக்காவை கண்டுபிடித்தபோது அங்கிருந்த சாக்லேட்டையும் கண்டுபிடித்தார்கள். அப்போது அது தேநீர் போல ஒரு பானமாகதான் பயன்படுத்தப்பட்டது.
பின்னர் ககோவாவை வைத்து விதவிதமான சாக்லேட் வகைகள் செய்வதற்கு ஐரோப்பியர்கள் அறிந்துக் கொண்டனர். 1847ல் பிரிட்டிஷ் சாக்லேட்டியர்களான ஜே.எஸ்.ஃப்ரை மற்றும் அவரது மகன்கள் முதன்முதலாக சாக்லேட்டை சர்க்கரை சேர்த்து சின்ன சின்ன கட்டிகளாக மாற்றும் முறையை கண்டுபிடித்தனர். பின்னர் அதில் வெண்ணெய் கலந்து மேலும் சில சாக்லேட் வகைகல் கண்டறியப்பட்டன. 1876ல் ஸ்விட்சர்லாந்து சாக்லேட் பிரியர் டேனியல் பீட்டர் என்பவர் சாக்லேட்டில் பால் பவுடரை கலந்து மில்க் சாக்லேட் செய்யும் முறையை கண்டறிந்தார். இப்போது நாம் சாப்பிடும் பல சாக்லேட் வகைகள் இப்படியாக உருவானதுதான்.
இன்று உலகம் முழுவதும் சாக்லேட் என்ற வார்த்தையை கேட்டால் சிரிக்காத குழந்தைகள் கிடையாது. இதய நலன், வயிறு கோளாறுகளை சரிசெய்வது மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றிற்கு சாக்லேட் சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது. அதேசமயம் சாக்லேட் அதிகமாக சாப்பிடுவதால் சர்க்கரை அளவு அதிகரித்தல், சொத்தை பல் பிரச்சினையும் ஏற்படும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான். அமிர்தமான சாக்லேட்டை அளவோடு உண்டு மகிழ்வாக வாழ்வோம்!