ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (11:30 IST)

ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வருமா.? இந்தியா உதவியுடன் அமைதி பேச்சுவார்த்தை..!!

Russia Ukraine war
ரஷ்யா உக்ரைன் இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இந்தியாவின் உதவியுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும், இதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. 
 
இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் இவ்விரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்தி, அமைதி காண்பதற்கு இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. 
 
சமீபத்தில் ரஷ்யா சென்று பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதுபோல், ரஷ்யா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, அதிபர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்து, இருநாட்டில் அமைதி திரும்புவது குறித்து வலியுறுத்தினார். 
 
இந்தச் சூழலில், உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இதற்கு இந்தியா, சீனா, பிரேசில் நாடுகள் மத்தியஸ்தம் செய்ய வேண்டும்  என கேட்டுக்கொண்டார். இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் விதமாக, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், இந்த வாரத்தில் ரஷ்யா செல்கிறார்.

பிரிக்ஸ் மாநாட்டுக்காக செல்லும் அவர், ரஷ்யா மற்றும் சீனா நாடுகளின் உயர் அதிகாரிகள், அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதன் மூலம் ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்து வரும் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.