ஹிட்லரை வீழ்த்தியது போல வீழ்த்த வேண்டும்..! – உக்ரைன் குறித்து ரஷ்ய அதிபர் பேச்சு!
உக்ரைனில் ரஷ்யா கடந்த சில மாதங்களாக போர் நடத்தி வரும் நிலையில் இரண்டாம் உலகப்போரில் வென்றது போல வெல்வோம் என ரஷ்ய அதிபர் பேசியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தொடர்ந்து போர் நடந்து வருகிறது. உக்ரைனும் எதிர் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் பலியாகியுள்ளனர். ஏராளமான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளதுடன், தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாசி படையை ரஷ்யா தோற்கடித்ததன் 77வது ஆண்டு தினம் ரஷ்யாவில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் “நாசிசத்திலிருந்து தங்கள் பூர்வீக நிலங்களை மீட்க போராடிய ரஷ்ய முன்னோர்கள் போல தற்போதைய ரஷ்ய வீரர்கள் போராடுகிறார்கள்.
1945ல் இருந்ததை போல வெற்றி நமக்கே கிடைக்கும் என அவர்கள் நம்பிக்கையுடன் போரிடுகிறார்கள். புதிய தலைமுறையினரை கண்டு போரில் ஈடுபட்ட அவர்களுடைய தந்தை, தாத்தாக்கள் பெருமை கொள்வார்கள்.
உக்ரைன் பாசிசத்தின் பிடியில் இருப்பதால், இது ரஷ்யாவிற்கும், கிழக்கு உக்ரேனில் ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மையினருக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. உக்ரைனில் வசிப்பவர்கள் அனைவரும் அமைதியான மற்றும் நியாயமான எதிர்காலத்தை பெற நான் விரும்புகிறேன்” என்று பேசியுள்ளார்.