இனி மின்னல் வேக பதிலடிதான்..! – விளாடிமிர் புதின் விடுத்த எச்சரிக்கை!
உக்ரைன் விவகாரத்தில் தலையிடும் நாடுகள் மீது மின்னல் வேக பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி பல நாட்களாகியுள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலினால் பல லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அகதிகளாக அடைக்கலம் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பல உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் தொடர்ந்து உக்ரைன் ராணுவமும் ரஷ்யா மீது பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலுமே பல ராணுவ வீரர்கள் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளை எச்சரிக்கும் விதமாக பேசியுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் “உக்ரைனில் தலையிடும் எந்த நாட்டிற்கும் மின்னல் வேகமான பதிலடி கொடுக்கப்படும். மேலும் யாரேனும் ஏற்றுக்கொள்ள இயலாத அச்சுறுத்தல்களை ஏற்படுத்தினால், யாராலும் கணிக்க முடியாத ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தும்” என்றும் எச்சரித்துள்ளார்.