1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. us-death-penalty-firing-squad-returns

அமெரிக்காவில் மரண தண்டனைக்கு மீண்டும் துப்பாக்கியால் சுடும் முறை அமல்

America latest news
அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்ற, பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த விஷ ஊசி செலுத்தும் முறைக்கு  மாற்றாக, மீண்டும் துப்பாக்கியால் சுடும் முறையை கூட்டாட்சி அளவில் அமலுக்கு கொண்டுவர அமெரிக்க நீதித்துறை அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு  நேற்று இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
 
மரண தண்டனையை நிறைவேற்றப் பயன்படுத்தப்படும் பெண்டோபார்பிடல் உள்ளிட்ட ரசாயன மருந்துகளுக்கு அமெரிக்க சிறைத்துறையில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் பல முன்னணி பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது மருந்துகள் மனிதர்களைக் கொல்லப் பயன்படுத்தப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க சிறைகளுக்கு அவற்றை விநியோகிப்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டன.
 
சமீபத்திய ஆண்டுகளில், சில குற்றவாளிகளுக்கு விஷ ஊசி செலுத்தப்படும் போது, ஊசி சரியாக நரம்பில் இறங்காமல் அவர்கள் பல மணி நேரம் துடிதுடித்து உயிரிழந்த கொடூர சம்பவங்கள் அரங்கேறின. இதனால் குற்றவாளிகள் கடும் சித்திரவதையை அனுபவிப்பதாக மனித உரிமை அமைப்புகள் நீதிமன்றங்களில் பல வழக்குகளைத் தொடர்ந்தன. இதன் காரணமாக மரண தண்டனை நிறைவேற்றுவது பல மாகாணங்களில் தாமதமானது.
 
 
முந்தைய ஜோ பைடன் ஆட்சியில், மரண தண்டனைகளை நிறைவேற்றுவதற்கு கூட்டாட்சி அளவில் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தடையை அமெரிக்க நீதித்துறை அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது. நிலுவையில் உள்ள மரண தண்டனைகளை விரைவாக நிறைவேற்றும் நோக்கில் இந்த மாற்று முறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.  நிலுவையில் உள்ள 44 குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனையை நிறைவேற்ற அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.  மாகாண அளவில் ஏற்கனவே உட்டா, தென் கரோலினா, இடாஹோ, மிசிசிப்பி, மற்றும் ஓக்லஹோமா ஆகிய 5 மாகாணங்களில் துப்பாக்கியால் சுடும் முறை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த முறையில், மரண தண்டனை கைதி ஒரு நாற்காலியில் கட்டப்பட்டு, அவரது இதயம் இருக்கும் பகுதியை குறிவைத்து ஒரு குறியீடு வைக்கப்படும். கைதியின் கண்களும் கட்டப்பட்டிருக்கும். பின்னர் பயிற்சி பெற்ற 5 துப்பாக்கி சுடும் வீரர்கள் சிறிது தூரத்தில் நின்று ஒரே நேரத்தில் கைதியின் இதயத்தை நோக்கி சுடுவார்கள்.
 
இதில், யார் சுட்ட குண்டு உயிரைப் பறித்தது என்ற குற்ற உணர்ச்சியோ, மன உளைச்சலோ துப்பாக்கி சுடும் வீரர்களுக்குக் காலமெல்லாம் ஏற்படக் கூடாது என்பதற்காக, 5 துப்பாக்கிகளில் ஒன்றில் மட்டும் 'டம்மி தோட்டா வைக்கப்பட்டிருக்கும். யாருடைய துப்பாக்கியில் அது இருக்கிறது என சுடுபவருக்கே தெரியாது.
 
அமெரிக்க அரசின் இந்த அதிரடி முடிவுக்கு அம்னெஸ்டி இன்டர்நேஷனல், 'ரிப்ரீவ் போன்ற மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குற்றவாளிகளை விரைவாகக் கொல்ல வேண்டும் என்பதற்காக, காட்டுமிராண்டித்தனமான முறைகளை அரசு மீண்டும் கையில் எடுப்பது மனித உரிமைகளுக்கு எதிரானது என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
விரைவில் Redmi Note 17 Pro Max: 200MP கேமரா மற்றும் 10000mAh பேட்டரியுடன் மிரட்டலான வருகை!