இதற்கு மேலும் தடுப்பூசியை தாமதித்தால்…? – ஐ.நா வெளியிட்ட எச்சரிக்கை!
உலகம் முழுவதும் கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்துவதை தாமதப்படுத்தினால் கடும் விளைவுகள் ஏற்படலாம் என ஐ.நா எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பாதிப்புகள் காரணமாக பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலக நாடுகள் பல தடுப்பூசிகளை கண்டறித்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன.
ஆனாலும் கொரோனாவின் வெவ்வேறு வேரியண்டுகள் வேறு சில நாடுகளிலிருந்து பரவுவதால் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் 75 சதவீதம் மக்கள் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என ஐ.நா தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் கொரோனா குறித்து பேசிய ஐ.நா பொதுசெயலாளர் குட்டரெஸ், உலக நாடுகளில் பல மற்ற ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்காமல் இருக்கும்பட்சத்தில் அந்நாடுகளிலிருந்து வெவ்வேறு வேரியண்டுகள் தொடர்ந்து பரவும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். தடுப்பூசியை பகிர்ந்தளிப்பது மேலும் தாமதப்படுத்தப்பட்டால் கொரோனாவின் வெவ்வேறு பரவல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் என்றும், உலகம் முழுவதும் தடுப்பூசி பரவலாக அனைத்து மக்களுக்கும் சென்று சேர உலக நாடுகள் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.