வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (11:17 IST)

ஹமாஸ் தலைவர் படுகொலை எதிரொலி.! படைகளை அனுப்பிய அமெரிக்கா.! உச்சகட்ட போர் பதற்றம்..!!

War Ship
இஸ்ரேலுக்கு ஆதரவாக போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை மத்திய கிழக்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிக்கு செல்ல அமெரிக்க உத்தரவிட்டுள்ளதால் போர் பதற்றம் நீடிக்கிறது.
 
ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில்  ஜூலை 31-ல் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். அவரது படுக்கை அறையில் ஏற்கெனவே குண்டு வைக்கப்பட்டிருந்ததாக முன்பு தகவல் வெளியானது.

ஆனால் ஈரான் ராணுவம் விடுத்த அறிக்கையில், 7 கிலோ எடையுள்ள குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணை மூலம் இஸ்மாயில் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது என கூறியிருந்தது.  இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாத், தனது ஈரான் உளவாளிகள் மூலம் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Ismail
இஸ்மாயிலை படுகொலை செய்ததற்காக, இஸ்ரேல் கடும் தண்டனை அனுபவிக்கும் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் இஸ்மாயில் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க அரசு ஆதரவு அளிப்பது குற்றச்செயல் என ஈரான் ராணுவம் அறிக்கை வெளியிட்டது.   
 
இந்நிலையில் இஸ்ரேலுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.   இதையடுத்து அமெரிக்க கடற்படையில் உள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பலை, ஓமன் வளைகுடா பகுதிக்கு செல்ல அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின்  உத்தரவிட்டார். 
 
Helicopter
ஓமன் வளைகுடா பகுதியில் ஏற்கெனவே யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கி போர்க்கப்பல் உட்பட இதர போர்க்கப்பல்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும், போர் விமானங்கள் படைப்பிரிவு, ஏவுகணைகள் வீசும் போர்க்கப்பல்கள் ஆகியவற்றையும் மத்திய கிழக்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிக்கு செல்ல அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உத்தரவிட்டுள்ளது. 

 
இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்க படைகள் தற்போது மிகப் பெரியளவில் அனுப்பப்பட்டுள்ளதால் அங்கு போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.