இலங்கை அதிபர் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டி.. 20 பேர் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள்..!
இலங்கை அதிபர் தேர்தலில் 38 பேர் போட்டியிடுவதாகவும் அவர்களில் 20 பேர் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்றும் 18 பேர் சுயேட்சைகள் என்றும் கூறப்படுகிறது. அனைவரது வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இதுவரை இல்லாத அளவில் அதிக வேட்பாளர்கள் கொண்ட இலங்கை அதிபர் தேர்தல் இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தற்போதைய அதிபர் ரனில் விக்ரமசிங்க மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
அவரை எதிர்த்து மகிந்தா ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, நீதித்துறை அமைச்சராக இருந்த விஜயதாச ராஜபக்சே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா உள்பட பலர் தேர்தல் களத்தில் இருக்கும் முக்கிய வேட்பாளர்கள் ஆகும்.
இந்த நிலையில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் அவகாசம் முடிவடைந்த நிலையில் இதுவரை அதிபர் தேர்தலில் 38 பேர் வேட்பாளர் தாக்கல் செய்துள்ளனர். இதில் 20 பேர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்றும் 18 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் என்றும் கூறப்படுகிறது.
அனைத்து 38 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டால் இதுதான் இலங்கையில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் அதிபர் தேர்தல் என்றும் கூறப்படுகிறது.
Edited by Mahendran