செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (09:02 IST)

சோதனையே முடியலை.. அதுக்குள்ள விற்பனையா? – ரஷ்ய கொரோனா மருந்தால் ஆபத்தா?

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் முறையான சோதனைகள் இன்றி ரஷ்யா கொரோனா மருந்தை உருவாக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த ஜனவரியில் சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை பலி கொண்டு வருகிறது. உலக நாடுகள் பல இந்த வைரஸுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் கமலேயா ஆய்வு மையம் உருவாக்கியுள்ள இந்த தடுப்பு மருந்து இரண்டு கட்ட பரிசோதனைகளை தாண்டி மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. இந்நிலையில் ஆகஸ்டு இறுதிக்கும் மக்களுக்கு மருந்துகளை வழங்குவதற்காக உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆனால் ரஷ்யாவின் இந்த செயலுக்கு மருத்துவ நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முதல் இரண்டு கட்ட சோதனைகளுக்கு பிறகான பக்க விளைவுகள் சோதனை செய்யும் காலத்தை ரஷ்யா வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளதாகவும், மூன்றாம் கட்ட சோதனை இன்னமும் முடியாத நிலையில் மக்களுக்கு கொடுப்பதற்காக மருந்து உற்பத்தியை தொடங்குவது, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த முதல் நாடு என்ற பெருமையை பெற வேண்டும் என்ற அவசரகதியில் நடத்துவதாக உள்ளது என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இப்படி அவசரகதியில் தயாரிக்கப்படும் மருந்தால் கொரோனா அழிவதற்கு பதிலாக மேலும் அதிகமான சுகாதார கேடுகளே விளையும் எனவும் தெரிவித்துள்ளனர்.