ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 26 ஜூலை 2024 (16:10 IST)

கமலா ஹாரிசுக்கு ஒபாமா ஆதரவு.! மிகச்சிறந்த அதிபராக செயல்படுவார் என நம்பிக்கை..!!

Obama Kamala
அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் களமிறங்க  முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வருகிற நவம்பர் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கி உள்ளார். ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன்  போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
விலகிய ஜோ பைடன்:
 
வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவு காரணமாக பைடனை  மாற்ற வேண்டும் என ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் போர்க்கொடி துாக்கினர். இதனால் அதிபர் தேர்தலில் இருந்து  ஜோ பைடன் விலகினார். மேலும், கட்சியின் வேட்பாளராக, துணை அதிபர் கமலா ஹாரிசை நிறுத்த அவர் ஆதரவு தெரிவித்திருந்தார். 
 
Kamala Harish
கமலா ஹாரிசுக்கு ஆதரவு:
 
அடுத்த மாதம் சிகாகோவில் நடைபெற உள்ள கட்சி மாநாட்டில், அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார். கமலா ஹாரிசுக்கு கட்சியின் பல மூத்த தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், முன்னாள் அதிபர் பரக் ஒபாமா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். 
 
Obama
ஒபாமா ஆதரவு:
 
இந்நிலையில், ஒபாமா வெளியிட்ட அறிக்கையில், இந்த வாரம், நானும், மிச்சலும், எங்களது நண்பர் கமலா ஹாரிசை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்தார். அப்போது, அமெரிக்காவின் மிகச்சிறந்த அதிபராக அவர் இருப்பார் என்றும் எங்களின் முழு ஆதரவை அவருக்கு வழங்கினோம் என்றும் அவர் கூறினார்.


ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்த ஒபாமா, நாட்டின் முக்கியமான இந்த தருணத்தில், நவம்பர் மாதம் நடக்கும் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதை உறுதி செய்ய எங்களால் முடிந்ததை செய்வோம் என்று கூறினார்.