1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 10 பிப்ரவரி 2024 (15:46 IST)

பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதில் இழுபறி..! யாருக்கும் பெரும்பான்மை இல்லை..! கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு..!!

pakistan election
பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைய இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
 
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பல்வேறு கட்சிகள் களம் இறங்கி இருந்தாலும் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர்களின் கட்சிகளான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
 
பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 266 தொகுதிகளுக்கும் நேரடியாக மக்கள் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்த 266 தொகுதிகளில் 1 தொகுதியில் வேட்பாளர் இறந்ததையடுத்து, மற்ற 265 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் தனிப் பெரும்பான்மைக்கு 133 இடங்கள் தேவை. நேற்று மாலை நிலவரப்படி 136 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின. 
 
இதில், இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஆதரவாளர்கள் 57 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 43 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. பிலாவல் பூட்டோவின் பிபிபி கட்சி 26 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது.
 
இந்த நிலையில், இன்று நண்பகல் 1 மணி நிலவரப்படி தேசிய அவையின் மொத்தமுள்ள 265 இடங்களில், இம்ரான் கானின் ஆதரவு வேட்பாளர்கள் 100 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 71 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 
 
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

 
நவாஸ் ஷெரீப்பின் அறிவுறுத்தலின்பேரில் முன்னாள் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள் ஆசிப் அலி சர்தாரி, பிலாவல் பூட்டோ ஆகியோரைச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து  கூட்டணி ஆட்சி அமைப்பது என்றும், எந்தெந்த பதவிகள் யார் யாருக்கு என்பது தொடர்பாக இரு கட்சிகளின் தலைவர்களும் அமர்ந்து பேசி முடிவெடுக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது