செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (21:40 IST)

பாகிஸ்தான் பொதுத்தேர்தல்: யார் முன்னிலை? - தற்போதைய நிலவரம்

நேற்று (வியாழன், பிப்ரவரி 8) நடந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது, முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
 
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, நவாஸ் ஷெரீப் மற்றும் இம்ரான் கான் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
 
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் 59 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், நவாஸ் ஷெரிஃபின் வெற்றி குறித்து இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ சந்தேகம் எழுப்பியுள்ளது.
 
பிடிஐ கட்சித் தரப்பில் பதிவிடப்பட்ட ஒரு ட்வீட்டில், “செல்லுபடியாகும் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை, பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது. மக்களின் சுதந்திர கருத்துரிமையைத் திருடியதற்காக நவாஸ் ஷெரிஃப் வெட்கப்பட வேண்டும்,” என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ட்வீட்டுடன் ஒரு படமும் பகிரப்பட்டுள்ளது. அதில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 293693 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், செல்லுபடியாகும் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 294043 என எழுதப்பட்டுள்ளது.
 
இந்தக் குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சிகள் முன்வைத்தாலும், இதுகுறித்து தேர்தல் ஆணையம் எதுவும் தெரிவிக்கவில்லை.
 
இதனிடையே இம்ரான் கானின் பிடிஐ ஆதரவு வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 49 இடங்களில் வென்றுள்ளதாக தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
 
அதேவேளையில், இம்ரான் கானின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியமளிப்பதாக அந்நாட்டு பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன.
 
சர்ச்சைகளுக்கு இடையே நடந்து முடிந்த தேர்தல்
 
பல சர்ச்சைகளுக்கிடையே பாகிஸ்தனின் தேர்தல் நேற்று (வியாழன், பிப்ரவரி 8)நடந்து முடிந்தது. இதில் கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்தனர்.
 
தேர்தலின்போது செல்போன் இணைப்புகள், இணைய வசதி ஆகியவை அதிகாரிகளால் இடைநிறுத்தப்பட்டன. பயங்கரவாத சம்பவங்கள் நிகழாமல் தடுக்க இந்த நடவடிக்கை அவசியமானது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
 
முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் வெளியேற்றப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தேர்தல் நடந்துள்ளது.
 
பல ஆய்வாளர்கள் இந்தத் தேர்தலை பாகிஸ்தானின் நம்பகத்தன்மை இல்லாத தேர்தல் என்று கூறியுள்ளனர். கடந்த ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கானின் கட்சி இணைய வசதி இடைநிறுத்தப்பட்டதை ‘கோழைத்தனமான செயல்’ என்று விமர்சித்தது.
 
யார் இந்த நவாஸ் ஷெரீப்?
 
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானை விட்டு வெளியேறி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு லாகூர் தொகுதியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
2019-ஆம் ஆண்டில், உடல்நிலை காரணமாக அவர் ஜாமீனுக்கு மனு செய்ய அனுமதிக்கப்பட்டார். அவர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் பொது பதவியில் இருக்க தடை விதிக்கப்பட்டார்.
 
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் லண்டனில் இருந்து தாயகம் திரும்பி, சிறைபடுத்தப்பட்டுள்ள தனது பரம எதிரியான இம்ரான் கானின் கட்சிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டார்.
 
ஷரீப்புக்கு அரசியல் மறுபிரவேசம் ஒன்றும் புதிதல்ல. 1999-இல் நடந்த இராணுவம் அவரது இரண்டாவது பதவிக்காலத்தை கவிழ்த்த பிறகு, 2013-ஆம் ஆண்டில் சாதனையாக மூன்றாவது முறையாக பிரதமரானார்.
 
சிறைபிடிக்கப்பட்டும் ஆதிக்கம் செலுத்தும் இம்ரான் கான்
இம்ரான் கான் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டாலும், தேர்தலில் தவிர்க்கமுடியாத சக்தியாகத் தொடர்கிறார். கணிப்புகளின்படி, 101 நாடாளுமன்றத் தொகுதிகளில் 47 இடங்களில் அவரது பிடிஐ ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
 
சிலருக்கு, கான் ஒரு புரட்சிகரமான ஹீரோ. அவரது எதிரிகளுக்கு, அவர் அதிகார வெறிபிடித்தவர் மற்றும் ஊழல்வாதி.
 
தேர்தலில் வென்று நான்கே ஆண்டுகளுக்குப் பிறகு, 2022-இல் அவர் எதிரிகளால் பாராளுமன்ற பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் இப்போது ஊழல் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் உட்பட 170-க்கும் மேற்பட்ட வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். இது அவரை தேர்தலில் இருந்து வெளியேற்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட முயற்சி என்று அவர் கூறுகிறார்.
 
ஆனால் அவர் இன்னும் கணிசமான ஆதரவைக் கொண்டுள்ளார். அவர் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இரவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாகிஸ்தான் முழுவதும் போராட்டம் நடத்தினர்.