செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2022 (08:32 IST)

என்னாடா இது ஆண்களுக்கு வந்த சோதன? சொந்த நாட்டைவிட்டு ஓட்டம்!

பல ரஷ்ய ஆண்கள் உக்ரைனில் போருக்கு இராணுவ அழைப்பைத் தவிர்ப்பதற்காக நாட்டை விட்டு தப்பி ஓடுகின்றனர் என தகவல்.


உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 7 மாதங்கள் கடந்து விட்ட போதிலும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையிம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ரஷ்யா தான் கைப்பற்றிய உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்களுக்கு ரஷ்ய அடையாள அட்டைகளை அளித்து அப்பகுதிகளை ரஷ்யாவின் பிராந்தியமாக மாற்றி வருகிறது.

மேலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் சில பிராந்தியங்களை பொது வாக்கெடுப்பு நடத்தி அவற்றை ரஷ்யாவுடன் இணைப்பதற்காக நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

கடந்த 7 மாத காலமாக நடந்து வரும் போரால் இருதரப்பு ராணுவ வீரர்கள் மட்டுமல்லாமல் உக்ரைன் பொதுமக்களும் ஏராளமாக உயிரிழந்துள்ளனர். எனினும் இலக்கை எட்டும் வரை போர் தொடரும் என ரஷிய அதிபர் புதின் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதற்காக 3 லட்சம் ரஷியர்களை அணி திரட்ட உள்ளதாக அண்மையில் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியானது முதல் ரஷியாவை சேர்ந்த ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக தகவல். ஆம், ரஷ்யாவின் அண்டை நாடான ஜார்ஜியாவுக்கு செல்ல விசா விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் ரஷிய ஆண்கள் பலரும் சாலை மார்க்கமாக ஜார்ஜியாவுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

இதே நிலைதான் ரஷியாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்தில் உள்ளது. அங்கு ஒரே இரவில் மக்களின் கூட்டம் அதிகமாகியிருப்பதாக பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது.