9 கிலோ சங்கிலி அணிந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்த நபர்.. காந்தத்தால் இழுத்து பரிதாப பலி..!
அமெரிக்காவில் உள்ள ஸ்கேன் சென்டர் ஒன்றில், எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியின் காந்தசக்தியால் உள்ளிழுக்கப்பட்டு 61 வயதுடைய ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்கேன் செய்ய வந்த அந்த நபர், தனது கழுத்தில் ஒன்பது கிலோ எடையுள்ள உலோக சங்கிலி அணிந்திருந்ததாக தெரிகிறது. ஸ்கேன் நடைபெற்று கொண்டிருந்தபோது, கருவியின் வலுவான காந்தசக்தி அவரை திடீரென உள்ளிழுத்துள்ளது. இதில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அருகில் இருந்த அவரது மனைவி, உடனடியாக ஸ்கேன் கருவியை அணைக்குமாறு கோரிக்கை விடுத்தும், அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டதாகவும், ஒரு சில நொடிகளிலேயே அந்த நபர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், எம்ஆர்ஐ ஸ்கேன் செய்வதற்கு முன்பு தனது கணவர் அன்பாக "டாட்டா" காட்டியதாகவும், ஆனால் அடுத்த சில நொடிகளில் அவர் உயிரிழந்ததை தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் அவரது மனைவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. எம்ஆர்ஐ ஸ்கேன் கருவிகள் உள்ள இடங்களில் வலுவான காந்தப்புலம் இருக்கும் என்றும், இது சக்கர நாற்காலியை கூட தூக்கி எறியும் அளவுக்கு வலிமையானது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்கேன் செய்யும் இடத்தில் உலோக சங்கிலி அணிய அனுமதி இல்லாத நிலையில், அவர் எப்படி எந்தவித சோதனையும் இன்றி உள்ளே அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Edited by Siva