வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 27 ஜூலை 2024 (14:58 IST)

அதிபர் தேர்தலில் களமிறங்கிய கமலா ஹாரிஸ்.! வேட்புமனு படிவத்தில் கையெழுத்து.!!

Kamala Harris
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில்  வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆவணங்களில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
 
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அதேபோல ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
 
ஆனால் வயது முதிர்வு மற்றும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு ஜோ பைடன் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று ஜனநாயக கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.இதை தொடர்ந்து கடந்த 21-ம் தேதி  அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக  ஜோ பைடன் அறிவித்தார்.

அந்த தருணம் முதலே ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ரேஸில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸின் கை ஓங்கி இருந்தது. அவருக்கு அதிபர் பைடனும் ஆதரவு தெரிவித்திருந்தார். கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார் என இரண்டு முறை அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமாவும் கூறியிருந்தார். 

இந்நிலையில் தனது எக்ஸ் தளத்தில், அமெரிக்க அதிபர் பதவிக்கான எனது வேட்புமனுவை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் படிவத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளேன் என்று கமலா ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

 
ஒவ்வொரு வாக்குகளையும் பெற கடுமையாக உழைப்பேன் என்றும் நவம்பரில் நடைபெறவிருக்கும் தேர்தலில், எங்கள் மக்கள் இயக்க பிரச்சாரம் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.