வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 மே 2025 (09:02 IST)

ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் படிக்க தடை! ட்ரம்ப் உத்தரவு- அதிர்ச்சியில் மாணவர்கள்!

Donald Trump Harvard University

ஏராளமான உலக நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படிக்கும் அறிவுக் கேந்திரமாக விளங்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் படிக்க ட்ரம்ப் தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்ற கொள்கையோடு செயல்படுத்தி வரும் புதிய சட்டங்கள், நடைமுறைகள் அமெரிக்காவை நம்பி வந்த பல வெளிநாட்டு மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன. எச்1பி விசா தொடங்கி பல கெடுபிடிகளை விதித்த ட்ரம்ப் அரசு தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும் தலையை நுழைத்துள்ளது.

 

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்து படிக்கும் அறிவுக் கேந்திரமாக விளங்கி வருகிறது. அதேசமயம் கருத்து சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வளாகம் என்பதால் பல்வேறு நாட்டின் அரசியல் விவாதங்களும் அங்கு இருக்கிறது.

 

ஆனால் இதை ட்ரம்ப் அரசு ஆபத்திற்குரிய ஒன்றாக கருதுகிறது. சமீபத்தில் அமெரிக்க உள்துறை செயலாளர், ஹார்வர்ட் பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழகத்திற்குள் நடக்கும் வன்முறை, யூத எதிர்ப்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய நபர்களின் நடமாட்டம் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை கண்டுக் கொள்ளாமல் மெத்தனமாக உள்ளதாக குற்றம் சாட்டினார்.

 

இந்நிலையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்கு அதிபர் ட்ரம்ப் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டு மாணவர்கள் ஹார்வர்டில் படிக்க விரும்பினால் ஆன்லைன் முறையில் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கெடுபிடி காட்டுவதாக கூறப்படும் நிலையில், இது சட்ட விரோதம் என ஹார்வர்ட் பல்கலைக்கழக நிர்வாகமே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K