நாசா புகைப்படத்தை பங்கமாய் கலாய்த்த எலான் மஸ்க்! – வைரலாகும் ட்வீட்!
நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை கலாய்த்து எலான் மஸ்க் இட்டுள்ள ட்வீட் வைரலாகியுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சமீபத்தில் ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பியது. பூமியிலிருந்து பல லட்சம் கிலோ மீட்டர்கள் அப்பால் விண்வெளியில் நிலைக் கொண்டுள்ள இந்த தொலைநோக்கி பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகளை படமெடுத்து அனுப்பி வருகிறது.
சமீபத்தில் இந்த புகைப்படங்களை நாசா வெளியிட்ட நிலையில் உலகம் முழுவதும் இந்த புகைப்படங்கள் குறித்த பேச்சாக உள்ளது. அடுத்ததாக சனி, வியாழன் போன்ற கோள்களின் புகைப்படங்களையும் வெளியிடுவதாக நாசா அறிவித்துள்ளது.
இந்நிலையில் நாசாவின் இந்த புகைப்படம் குறித்து கிண்டல் செய்யும் விதமாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் சமையலறை ஒன்றில் போடப்பட்டுள்ள மார்பில் கல்லை ஸூம் செய்து பார்த்தால் நாசா வெளியிட்ட கேலக்ஸி புகைப்படம் போல உள்ளதாக சுட்டிக்காட்டி “சிறப்பான முயற்சி நாசா” என எழுதப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்கின் இந்த ட்வீட் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் நிலையில், பலர் எலான் மஸ்க்கையுமே கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.