நிலவுத் துகள், கரப்பான்பூச்சி ஏலம்..! தடுத்து நிறுத்தும் நாசா! – ஏன் தெரியுமா?
நிலவில் இருந்து கொண்டு வந்த நிலவின் துகள்கள் மற்றும் கரப்பான்பூச்சியை ஏலத்தில் விற்பதை நிறுத்த வேண்டும் என நாசா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறாக கடந்த 1969ம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பிய நாசா அங்கிருந்து சந்திர துகள்களை சேகரித்து வந்தது.
சந்திரத் துகள்கள் நச்சுத்தன்மை உடையவையா என்பதை கண்டறிய அவற்றை கரப்பான்பூச்சி மற்றும் மீன்களுக்கு அளித்து பரிசோதனை செய்தனர். ஆனால் அதனால் அவற்றிற்கு பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. அப்போது ஆய்வு செய்யப்பட்ட கரப்பான் பூச்சிகள் மற்றும் நிலவின் துகள்கள் அடங்கிய குப்பிகளை ஒரு குப்பி ரூ.3 கோடி என்ற அளவில் ஏலத்தில் விடுவதாக அறிவிக்கப்பட்டது.
இதை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் நாசா இந்த விற்பனையை நிறுத்த கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் நாசா ஆய்வு செய்த பொருட்கள் விற்பனைக்கோ, தனிநபர் வைத்திருக்கவோ அல்லது தனியார் காட்சியகங்களில் காட்சிப்படுத்தவோ அனுமதியில்லை என்றும், இதனால் ஏல விற்பனையை நிறுத்துமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.