வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 28 மார்ச் 2018 (17:59 IST)

2 நாட்களில் சீன விண்வெளி நிலையம் பூமியில் விழலாம்?

வெள்ளிக்கிழமை வாக்கில் சீன விண்வெளி நிலையத்தின் உடைந்த பாகங்கள் பூமியின் மீது விழலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
சீனாவின் லட்சிய விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதிதான் தியன்கொங்-1 என்கிற விண்கலன். 2022 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதரை அனுப்புகின்ற திட்டத்தின் மாதிரியாக தியன்கொங்-1 விண்கலன் இருந்தது.
 
2011 ஆம் ஆண்டு இது விண்வெளிக்கு அனுபப்பட்டது. 5 ஆண்டுகால பணிகளை நிறைவேற்றிய பின்னர், பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது இது கட்டுப்படுத்த படாமல் உள்ளதால், எங்கு, எப்போது விழும் என்பது கணிக்க முடியாமல் உள்ளது.

இதன் பெருமளவிலான பாகங்கள் வளிமண்டத்தில் எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால், சில பாகங்கள் வளி மண்டலத்தையும் தாண்டி பூமியில் விழலாம். 43 டிகிரி வடக்கிலும், 43 டிகிரி தெற்கிலும் என நிலநடுக்கோட்டின் வட மற்றும் தென் பகுதியில் இது விழக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் அறிவித்திருக்கிறது. 
 
ஆனால் இது குறித்து கவலைப்பட வேண்டிய தேவையே இல்லை. பூமியின் மேற்பரப்பு வரை இந்தப் பாகங்கள் வந்தாலும், மனிதரை தாக்குகின்ற சாத்தியம் மிகவும் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.