செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By திருமலை சோமு
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (23:58 IST)

தொழில்நுட்பங்களில் முன்னிலை வகிக்கிறது சீனா!

சீன – அமெரிக்க உறவு கடந்த சில ஆண்டுகளாக சீர்கெட்டுள்ளதோடு, டிரம்ப் ஆட்சியில் இருநாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவியதை உலகம் அறியும். 

வரும் ஆண்டுகளில், இருதரப்பு உறவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடையேயும் எழுந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா-சீனா பார்ட்னர்ஷிப் அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் ஜான் மில்லிகன்-வைட்  கூறும் போது சீன – அமெரிக உறவை சரியான பாதையில் வழிநடத்தும் அளவிற்கு அனுபவமும் பக்குவமும் கொண்ட ஒரு நபரை இந்த முறை அமெரிக்கர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். புதிய அதிபரின் பதவியேற்புக்கு பிறகு பல பிரச்சனைகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளார். 
 
சீனாவின் முக்கியத்துவம் பொருளாதார ரீதியாகவும் புவிசார் அரசியல் ரீதியாகவும் வளரும்போது, இருதரப்பு உறவு பழங்கதையாகும் ஆபத்து உள்ளது. அமெரிக்கா எப்படியெல்லாம் ஆதிக்கம் செலுத்தமுடியும் எந்த வழியிலெல்லாம் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சக்தியாக இருக்க முடியும் என்பதில் கவனம் செலுத்துகிறது, உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகள் மற்றும் இரண்டு இராணுவ வல்லரசுகள் எவ்வாறு தங்கள் பொருளாதார வளர்ச்சியையும் தேசிய பாதுகாப்பையும் ஒருங்கிணைத்து அமைதியாக வாழமுடியும் என்பதில் கவனம் செலுத்துகின்றன.
 
கடந்த சில ஆண்டுகளாக சீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா செயல்பட என்ன காரணம் என்று நுணுக்கமாக சிந்தித்தால் ஒரு விசயத்தை நாம் புரிந்து கொள்ள முடியும் மேற்கத்திய நாடுகளில் நிகழாத பெரிய மாற்றங்கள் கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் நிகழ்ந்து வருகிறது. எடுத்துக்காட்டாக டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சி, சீனாவில்  செல்போன் மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனை, முழு மேற்கத்திய நிதி அமைப்பையும் ஆச்சரியத்திற்குள்ளாக்குகிறது. எனவே ஹவாய் மற்றும் பிற சீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிரான தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. 
 
உலகின் மூன்றில் இரண்டு பங்கினர் சீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். குறைந்த திறன் கொண்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் உலகின் மூன்றில் ஒரு பங்கினர் விரைவில் சீன தொழில்நுட்பங்களுக்கு மாறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய மாற்றத்தின் காலம். ஐந்து ஆண்டுகளில் சீன நிறுவனங்கள் மிக வேகமாக வளர்ச்சி அடையும் என்று நம்பப்படுகிறது. 
 
மேலும் மேற்கத்திய நாடுகளின் அரசியல் அமைப்புகள் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடவில்லை அவர்கள் இரண்டு முதல் நான்கு ஆண்டு சுழற்சி முறைகளில் பணியாற்றவே முனைகிறார்கள். அவர்களின் இத்தகையப் போக்கு சீனாவுக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது. கிளின்டன் நிர்வாகத்திலும் ஒபாமா நிர்வாகத்திலும் ஒரு முக்கிய நபராக இருந்த லாரன்ஸ் சம்மர்ஸ் என்பவர் இப்பிரச்சினையை சுட்டிக்காட்டியுள்ளார். 2050 ஆம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தின் பாதி அளவு குறைவதற்கான சாத்தியம் இருப்பதையும், அப்போது உலகம் எப்படி இருக்கும் என்பதையும் விவாதிக்க ஒரு அமெரிக்க அரசியல் தலைவரால் முடியுமா? இதைத்தான் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் எதிர்காலத்தில் கையாளப்போகிறார்கள். இந்த நடைமுறையை புரிந்து கொள்ள அவர்களுக்கு நீண்டகாலம் எடுக்கும் என்பதே உண்மை. 
 
- திருமலை சோமு