எதிர்காலத்தை உருவாக்கும் தொழில்நுட்பங்கள்..!
உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை எத்தனை எத்தனையோ மாற்றங்களை மனிதகுலம் சந்தித்து விட்டது. கற்காலம் தொடங்கி கம்ப்யூட்டர் காலம் வரை என்று நாம் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். கற்றது கைமண் அளவு என்றாலும் அந்த கை மண்ணையும் கலைநயத்தோடும் விஞ்ஞான அறிவோடும் கையாளத் தெரிந்தவன் மனிதன் என்பதால்தான் கம்பியூட்டர் காலத்தையும் தாண்டி செயற்கை நுண்ணறிவு எனும் புதிய பரிணாமத்திற்குள் அறிவை செலுத்தி உலகை தன் வசப்படுத்தி வருகிறான் மனிதன்.
ஆனாலும் பழங்காலத்தில் இருந்து இன்றுவரையிலும் மனித குலம் சந்தித்து வரும் இடர்களுக்கு குறைவில்லை. எத்தனையோ பேரிடர்கள், எத்தனையோ பெருந்தொற்றுக்கள் என மனிதர்களை அச்சுறுத்தி வந்த போதெல்லாம் காலகட்டத்திற்கு ஏற்றவாறு அவன் தன் அறிவாற்றலால் அவற்றை வென்று இருக்கிறான் என்பதுதான் உண்மை.
கடந்த நூற்றாண்டுவரை கடவுள்களின் செயலாக பார்க்கப்பட்டு வந்த விசயங்கள் அனைத்தும் இன்று அறிவியலின் ஆராய்ச்சிக் கூடத்திற்குள் வந்துவிட்டது. எல்லாவற்றுக்குமான காரண காரியங்களை அறிவியல் பூர்வமாகவே ஆராயத் தொடங்கியுள்ளது இன்றைய தலைமுறை. அதற்கு மிகப்பெரும் சான்றாக இன்றைய கரோனா காலத்தை குறிப்பிடலாம். பழங்காலங்களில் மனிதன் நோய்வாய்ப்பட்டால் மருத்துவத்தை நாடுகிறானோ இல்லையோ. ஆலயங்களையும் ஆன்மிக அருளாளர்களையும் தேடிப்போவது உண்டு. ஆனால் இன்றைய பெருந்தொற்று காலத்தில் உலகம் முழுவதும் ஆலயங்களின் கதவுகள் மூடப்பட்டு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிக் கூடங்களின் கதவுகள் பெருமளவில் திறக்கப்பட்டன. தொழில்நுட்பங்களை கொண்டு தொலையில் இருந்து மீளும் வழிகள் தேடப்பட்டன.
அதோடு மட்டுமல்லாமல் அறிவியலும் தொழில்நுட்பமும் தான் எதிர்கால மனித குலத்தின் கடவுளாக, நண்பனாக, ஆசானாக இருக்கப்போகிறது என்பதை இன்றைய பேரிடர் சுட்டிக்காட்டி இருப்பதாகவே அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
அந்த வகையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் செப்டம்பர் 17 முதல் 18 வரை மூன்றாவது யுனெஸ்கோ கிரியேட்டிவ் சிட்டிஸ் பெய்ஜிங் உச்சி மாநாடு நடைபெற்றது. "படைப்பாற்றல் நகரங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது, தொழில்நுட்பம் எதிர்காலத்தை உருவாக்குகிறது" என்ற தலைப்பில் இம்மாநாடு நடைபெறுகிறது.
கோவிட் -19 நெருக்கடிக்கு பின், புதிய நகர்ப்புற மேம்பாட்டு முறைகளை எவ்வாறு வடிவமைப்பது, கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக AI மற்றும் பெரிய தரவு போன்ற தொழில்நுட்பங்களும் பெய்ஜிங்கில் தொற்றுநோய் பரவலைத் தடுக்கவும் வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவியுள்ளன. கரோனா காலத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரட்டப்பட்ட தரவுக்களை கையாண்ட விதம் மற்றும், தொழில்நுட்ப உதவியுடன் வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி கற்றல் போன்றவற்றை மிக நேர்த்தியாக செய்து முடித்த சீனாவை யுனஸ்கோ பாராட்டியது.
அதோடு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சீனாவின் வசந்தவிழாவை யொட்டி கரோனா வைரஸ் பரவத்தொடங்கிய போது பொதுமக்கள் வைரஸைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை, பீதியில் இருந்தனர் இதையடுத்து உடனடியாக 6 நாட்களுக்குள் மக்கள் மருத்துவனைக்கு செல்லாமல் வைரஸ் குறித்த உடனடித் தகவல்களை ஆன்லைன் மூலம் பெறும் வசதி செய்து கொடுக்கப்பட்டது இது பீதி உணர்வைக் குறைக்க உதவியது என்று பெய்ஜிங்கில் நகராட்சி அறிவியல் தொழில்நுட்ப ஆணையத்தின் கலாச்சார மற்றும் தொழில்நுட்ப பிரிவின் துணை இயக்குநர் ஃபூ வென்ஜுன் கூறினார். மேலும் இந்த மாநாட்டில் 44 நாடுகளில் 90 க்கும் மேற்பட்ட நகரங்களில் பேரிடரை சமாளிக்க கையாளப்பட்ட 70 புதுமையான நடைமுறைகள் வெளியிடப்பட்டன.
டிஜிட்டல் பொருளாதாரத்தில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம், பெரிய தரவு, கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிளாக்செயின் போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நகர்ப்புற நிர்வாகத்தை எவ்வாறு மேம்படுத்தும் என்பதை இந்த உச்சிமாநாடு விளக்கி கூறியது.