வன்முறையால் பற்றி எரியும் வங்கதேசம்.! பிரதமர் ஹசீனா தலைமறைவு.! இந்தியாவில் தஞ்சமா.?
மாணவர்களின் போராட்டத்தால் கலவர பூமியாக வங்கதேசம் மாறி உள்ள நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதாக, அந்த நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தலையிட்டு, இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்ததையடுத்து, போராட்டம் ஓரளவு கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி, மாணவர்கள் நாடு முழுவதும் வீதியில் இறங்கி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் வன்முறை ஏற்பட்டதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.
இந்த வன்முறையில் 300-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வன்முறை காரணமாக வங்கதேசத்தில் ஆகஸ்டு ஏழாம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பிரதமர் ஷேக் ஹசீனா கூறியிருந்த நிலையில், ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என மாணவர் குழு திட்டவட்டமாக தெரிவித்தது.
நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா:
வன்முறை மற்றும் பதற்றம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது சகோதரியுடன் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நாட்டை விட்டு வெளியேறியதாக அந்த நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். மேலும் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், வன்முறையை கைவிட்டு மாணவர்களும், பொதுமக்களும் அமைதி காக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
ராணுவ கண்காணிப்பில் இடைக்கால அரசு:
மேலும் வங்கதேசத்தில் இடைக்கால ஆட்சி அமைய ராணுவம் துணை நிற்கும் என்றும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இடைக்கால அரசு அமைத்து நாட்டை வழி நடத்துவோம் எனவும் தளபதி கூறியுள்ளார்.
இதனிடையே, வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட சிலேட் நகரில், இந்தியர்கள் தங்கியிருக்கும் பட்சத்தில், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் உள்ள மேற்குவங்க மாநிலத்தில் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது.