மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஆங் சாங் சூச்சியை அவரின் வழக்குரைஞர்கள் சந்தித்துள்ளனர்.
வீடியோ கால் மூலம் நீதிமன்றத்தில் சூச்சி நல்ல உடல்நிலையுடன் உள்ளதாகவும், தனது வழக்கறிஞர்கள் குழுவை காண வேண்டும் என்று கூறியதாகவும் அவரின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மியான்மரில் ராணுவத்தால் ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெற்றதிலிருந்து சூச்சியின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்றும் ராணுவத்தை எதிர்த்து மக்கள் வீதிகளில் போராடினர். ஞாயிறன்று நடைபெற்ற போராட்டத்தில் அதுவரை இல்லாத அளவு 18 பேர் கொல்லப்பட்டனர்.
எங்கிருந்தார் சூச்சி?
பிப்ரவரி ஒன்றாம் தேதி மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு சூச்சி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அதன்பிறகு தற்போதுதான் அவர் வெளியில் தோன்றியுள்ளார். அதுவும் வீடியோ கால் மூலமாக.
முதலில் சூச்சி மீது, வாக்கி டாக்கிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாகவும், மியான்மரின் இயற்கை பேரழிவு சட்டத்தை மீறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தன. ஆனால் திங்களன்று அவர்மீது மேலும் சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தேர்தல் பிரசாரத்தின்போது தடைகளை கோவிட் 19 கட்டுப்பாடுகளை மீறியதாகவும், அச்சத்தை உண்டாக்கியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
முதல் கட்டத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மூன்று வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. புதிய குற்றச்சாட்டுகளுக்கு என்ன மாதிரியான தண்டனை என்பது தெரியவில்லை. இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணை மார்ச் 15 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு தொடர்ச்சியாக போராட்டஙக்ள் நடந்து வருகின்றன அதன் ஒரு பகுதியாக, சனியன்று குறைந்தது 18 பேர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்தது.
போராட்டங்களை ஒடுக்க காவல்துறை மற்றும் ராணுவம், போராட்டகாரர்களை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் திங்களன்று மியான்மரில் மீண்டும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும், சூச்சி உட்பட ஜனநாயகத்துக்கான தேசிய லீக்கின் பிற தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் போராடி வருகின்றனர்.
மியான்மர் போராட்டம்
கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் சூச்சியின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் பெரும்பானையாக வெற்றி பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததால் ஆட்சியை கைப்பற்றியதாக ராணுவம் தெரிவித்தது.
இருப்பினும் ராணுவம் தனது இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை வழங்கவில்லை. மேலும் இந்த வருடம் புதியதாக தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்
நாட்டின் நிர்வாகப் பொறுப்பை தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாக மியான்மர் ராணுவம் பிப்ரவரி 1ஆம் தேதி அறிவித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டு ஒரு தசாப்தம் கழித்து இது மீண்டும் நடந்திருக்கிறது.
இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை நாட்டில் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. 2011-ல் ஜனநாயக ஆட்சி அமைவதற்கு முன்பு, சுமார் 50 ஆண்டு காலம் ராணுவத்தின் சர்வாதிகார ஆட்சியை சந்தித்த நாடு மியான்மர். அதிகாலை நேரத்தில் ஆங் சான் சூச்சி மற்றும் பிற அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பாணி, தாங்கள் மறந்துவிட்ட அதே ராணுவ பாணியை நினைவுபடுத்துவதாக அந்த மக்களுக்கு இருந்தது.
மியான்மரில் சாலைகளை சூழ்ந்த போர் வாகனங்கள் - மீண்டும் இணைய சேவை முடக்கம்
ராணுவத்தின் பிடியில் மியான்மர்: பரிதவிக்கும் 10 லட்சம் தமிழர்களின் குமுறல்கள்
கடந்த ஐந்து ஆண்டுகளாக, சூச்சி மற்றும் ஒரு காலத்தில் தடை செய்யப்பட்டிருந்த அவருடைய ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி (என்.எல்.டி.) ஆட்சி நடத்தி வந்தது. 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுதந்திரமாக, நேர்மையாக 2015ல் நடந்த தேர்தலில் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தது. பிப்ரவரி 1ஆம் தேதி காலையில், அந்தக் கட்சியின் இரண்டாவது பதவிக் காலம் தொடங்கி இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் கால்வாசி இடங்கள் ராணுவத்தின் வசம் இருக்கும் வகையிலும், மிக முக்கியமான அமைச்சகங்கள் ராணுவத்தின் வசம் இருக்கும் வகையிலும் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் காரணமாக, மியான்மர் நிர்வாகத்தில் ராணுவம்தான் திரைமறைவில் கட்டுப்பாட்டை செலுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் என்ன பிரச்னை?
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நடந்த தேர்தலில் என்.எல்.டி கட்சி மொத்தம் உள்ள இடங்களில் 83 சதவீத தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதை பலரும் சூச்சியின் மக்கள் அரசாங்கத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பாகப் பார்த்தார்கள்.
2011-ம் ஆண்டு வரையிலான ராணுவ ஆட்சிக்குப் பிறகு நடத்தப்பட்ட இரண்டாவது தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மியான்மர் நாட்டின் ராணுவம் இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த நாட்டின் அதிபர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் புகாரளித்திருக்கிறது ராணுவம். தேர்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது.
தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டப்படும் இந்த விவகாரம் தொடர்பாக " நடவடிக்கை எடுக்கப்போவதாக" மியான்மர் ராணுவம் சமீபத்தில் அச்சுறுத்தி இருந்தது. எனவே ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கலாம் என்கிற அச்சம் அப்போதே உண்டானது.