அபுதாபியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்து கோவில்..! பிரதமர் மோடி திறந்து வைப்பு..!!
அபுதாபியில் 900 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு அதிபரை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, துபாய் மன்னரும், ஐக்கிய அரபு அமீரக பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிலையில், அபுதாபியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்து வழிபாடு செய்தார். ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபி அருகே அபு முரேகாவில் சுவாமி நாராயண் கோயில் கட்டப்பட்டுள்ளது. நாராயண் கோயில் சென்ற பிரதமரை புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தா நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
இதையடுத்து, கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி, சுவாமி நாராயண் மீது மலர் தூவி வழிபாடு செய்தார். அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள முதல் இந்து கோயிலுக்கு கங்கை மற்றும் யமுனை நதியின் நீரை பிரதமர் மோடி வழங்கினார். மேலும், கோவில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கோயிலின் மாதிரியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
இந்தக் கோயில் இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலி மார்பிள் கற்களால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கோயிலில் மொத்தம் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
நிலநடுக்கம், மற்றும் அதீத வெப்பத்தினால் கோயில் பாதிக்கப்படாமல் இருக்க 100 சென்சார்கள் கோயிலுக்கு அடியில் பொருத்தப்பட்டிருக்கிறது. இக்கோயில் மொத்தமாக 400 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் செலவில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது