பெண்களும் சென்று வழிபடும் ஐயப்பன் கோவில்! – ஆனால் சிலை கிடையாது! ஏன் தெரியுமா?
பொதுவாக ஐயப்பன் கோவில் என்றாலே பெண்கள் செல்லக் கூடாது என்ற ஐதீகம் உள்ளது. முக்கியமாக சபரிமலைக்கு. ஆனால் அதே சபரிமலை உள்ள கேரளாவில் பெண்கள் சென்று வரும் ஐயப்பன் கோவில் ஒன்றும் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
கேரளா மாநிலம் எர்ணாக்குளம் மாவட்டத்தில் காலடி என்ற இடத்தில் மஜ்ஜபுரா என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள அம்பாடத்து மாளிகா ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மூலவராக ஐயப்பன் தரிசனம் தரும் இந்த கோவில் ஐயப்பனுக்கு சிலையே கிடையாது என்பது இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு. ஆம், இந்த கோவில் ஐயப்பன் சிலைக்கு பதிலாக வெள்ளி முத்திரை தடி, திருநீறு பை, ஒரு கல் ஆகியவற்றையே ஐயப்பனாக நினைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்த கோவிலின் மற்றொரு சன்னதியில் மாளிகபுறத்து அம்மன் அருள் பாலிக்கிறாள். இந்த கோவிலுக்கு வந்து விளக்கேற்றி வழிபட்டு செல்பவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும், தீராத பிணிகள் தீரும் என்பது நம்பிக்கை. சனி தோஷத்தால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் சக்தி வாய்ந்தது இந்த திருத்தலம்.
இந்த திருத்தலத்தின் இன்னொரு சிறப்பு. ஐயப்பன் மூலவரான இந்த கோவிலில் பெண்களும் வந்து வழிபடலாம் என்பதுதான். இவ்வளவு அருள் நிறைந்த இந்த கோவில் எந்நேரமும் திறப்பதில்லை. எப்போது எல்லாம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறதோ, அந்த சமயங்களில் மட்டும்தான் இந்த கோவில் நடையும் திறக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்தின் முதல் 5 நாட்களும், கார்த்திகை மாதத்தில் முதல் நாள் தொடங்கி 41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜை காலங்களிலும் இந்த கோவில் திறக்கப்படுகிறது. அதுபோல ஐயப்பன் தோன்றிய நாளான பங்குனி மாதம், உத்திர நட்சத்திர நாளிலும் சன்னதி திறக்கப்படும்.
Edit by Prasanth.K