வியாழன், 21 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 மே 2024 (11:29 IST)

மாயாஜால நாரையால் அதிசய உலகில் சிக்கிய சிறுவன்! ஆஸ்கர் வென்ற The Boy and the Heron! – திரை விமர்சனம்!

The boy and the heron
ஜப்பானிய அனிமே திரைப்படங்களின் மிகப்பெரும் ஜாம்பவனான ஹயாவோ மியாசாகி இயக்கிய ‘தி பாய் அண்ட் தி ஹெரான்’ திரைப்படம் ஆஸ்கர் வென்ற பின் தற்போது இந்தியாவில் வெளியாகியுள்ளது.



ஜப்பானின் அனிமே தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. அப்படியான அனிமே திரைப்படங்களை இயக்குபவர்களில் முன்னொடியாக விளங்குபவர் ஹயாவோ மியாசாகி. இவர் இயக்கிய தி வைண்ட் ரைசஸ், ஸ்ப்ரிட்டட் அவே உள்ளிட்ட பல படங்கள் உலக பிரபலமானவை.

அந்த வகையில் மியாசாகி தனது 83 வயதில் இயக்கி வெளியாகியுள்ள படம் ‘தி பாய் அண்டி தி ஹெரான்’. இந்த படத்திற்கு சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதும் அளிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போர் நடந்துக் கொண்டிருக்கும் வேளையில் மருத்துவமனை ஒன்றில் ஏற்படும் தீ விபத்தில் மஹிட்டோ என்ற சிறுவன் தனது தாயை இழக்கிறான். அவனது தந்தை ஜப்பான் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் இரண்டாவது திருமணத்திற்கு நட்சுகோ என்ற பெண்ணை பார்க்கிறார். அந்த பெண்ணுடன் மஹிட்டோ சென்று ஒரு கிராமத்தில் வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அந்த கிராமத்தில் மாயாஜாலம் தெரிந்த ஒரு நாரை சுற்றி வருகிறது. அது மஹிட்டோவுக்கு பல தொல்லைகள் தருவதுடன், அவனை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து செல்ல முயல்கிறது. அதை நட்சுகோ தடுக்கிறாள். நட்சுகோவை தனது சித்தியாக ஏற்க விரும்பாத மஹிட்டோ அங்கிருந்து சென்றுவிடவே எண்ணுகிறார். இந்நிலையில்தான் அந்த மந்திரவாத நாரை நட்சுகோவை கடத்தி சென்று விடுகிறது. நிறைமாத கர்ப்பிணியான தனது சித்தி நட்சுகோவை காப்பாற்றுவதற்காக மந்திரவாத நாரையின் மாயாஜால உலகத்திற்குள் செல்கிறான் மஹிட்டோ. அங்கு அவன் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன? காணாமல் போன நட்சுகோவை அவன் காப்பாற்றினானா? என்பது மாயாஜாலங்கள் நிறைந்த முழுப்படம்.

The boy and the heron


ஸ்ப்ரிட்டட்  அவே, மூவில் கேஸ்டில் படங்களை போல ஒரு மாயாஜால உலகத்தை படைத்துள்ளார் மியாசாகி. மந்திர உலகில் நாரைகள் வேட்டையாடிகளாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும். ஒரு காட்சியில் ஒரு அடிப்பட்ட நாரையை கொல்ல மஹிட்டோ முனையும்போது அந்த நாரை “இந்த வாழ்க்கையை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை” என்று சொல்லி தன்னை கொல்லுமாறு சொல்லும். நாரைகள் ஜப்பானிய கலாச்சாரத்தில் முக்கியமான அங்கம் வகிப்பவை. அவற்றை கொண்டு மாயாஜாலமான கதையில் போர் குறித்த விவாதங்களையும், உலக அமைதி குறித்தும் பல விவாதங்களை உருவாக்குகிறார் மியாசாகி.

பெரிய பெரிய கிளிகள் கொண்ட பாராகீட் படை மந்திர உலகில் செய்யும் காமெடிகள், நாரையின் நயவஞ்சகம் நிறைந்த நகைச்சுவை காட்சிகள் பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் விரும்பும் வகையில் வழக்கம்போல தனது மேதமையை நிரூபிக்கும் வகையில் ஒரு படத்தை தனது 83வது வயதிலும் வழங்கியுள்ளார் மியாசாகி.

Edit by Prasanth.K