பெண்களை தொடரும் எழுதாத சட்டங்கள்!

Sasikala| Last Updated: புதன், 19 பிப்ரவரி 2020 (15:37 IST)
என்னதான் பெண்கள் சாதித்தாலும் ஒரு தந்தை அவளை பெருமை படுத்துவார். ஆனால் அதே ஒரு கணவனால் அந்த பெண்ணினின் பெருமையை திறமையை முழுமனதாக ரசிக்க முடிவதில்லை.மாறாக புகழ்ச்சியை கண்டு பொறாமைதான் கொள்கிறான், காரணம் அவனால் பெண்ணை தனக்கும் மேலாக பார்க்க மனசு இடம் கொடுப்பதில்லை என்பதே உண்மை. படைப்பின் வடிவே பெண்தான். கடவுளின் சக்தியும் பெண்தான். இதை ஒவ்வொரு ஆணும் உணர்ந்தால் மட்டுமே பெண்களுக்கு விடிவுகாலம் கிடைக்குமோ?
 
பெண் விடுதலை என்பதன் பொருளை இவர்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். பெண் விடுதலை என்பது, சம  உரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை இவைகளில் தொடங்கி சமையலறை, படுக்கையறை, மனஉணர்வுகள் வரையிலான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விஷயம் என்பதை முதலில் பெண்களே புரிந்து கொள்ள  வேண்டும். அடுத்து அதை அவர்கள் அவர்களை அண்டியுள்ள ஆண்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் பெண்  விடுதலையின் தாற்பரியம் பற்றி சமூக ரீதியானதொரு புரிந்துணர்வு ஏற்படும்.
 
ஓர் ஆண் முன்னேறி மேலே சென்றால், அவனது திறமை காரணம் என்று புகழும் உலகம், அதையே ஒரு பெண் சாதித்தால்,  'வேறு வழி’யில் சாதித்தாள் என்று புறம் பேசும். தன் உழைப்பில் தன்னைச் சார்ந்தவர்களை வாழவைக்கும் பொருளாதாரச்  சுதந்திரத்தைப் பெற, ஒரு பெண் கடக்க வேண்டிய பாடுகள் சொல்லில் அடங்காது.
 
பெண் விடுதலை உலகளாவிய ரீதியாகக் கிடைக்க வேண்டும். பெண் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண்  இப்படித்தான் வாழ வேண்டுமென்று வீட்டுக்குள் நடைமுறுத்தப்படும் எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும்.  பெண்ணை இறுகப் பற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் பெண்ணின் உயிரையும் உள்ளத்தையும் வதைக்கின்ற  அத்தனை விலங்குகளும் உடைத்தெறியப்பட வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :