சுவையான கருணைக் கிழங்கு மசியல் செய்ய...!

கருணைக்கிழங்கு பழைய கிழங்காக இருந்தால் அரிக்காமல் இருக்கும். மேல் தோலை கீறிப் பார்த்து, உள்ளே சிவப்பாக இருந்தால் புதிது. அப்படி இருந்தாலும்  வாங்கி வீட்டில்வைத்து, 20 அல்லது 25 நாள்களுக்குப் பிறகு ஓரளவு உள்பகுதி வெள்ளையானதும் உபயோகிக்கலாம்.
அதற்கு மேலும் காரல், அரிப்பு இல்லாமல் இருக்க, எப்பொழுதும் கருணைக்கிழங்கை அரிசிகளைந்த நீரிலேயே வேகவைக்க வேண்டும்.
 
தேவையான பொருள்கள்:
 
கருணைக் கிழங்கு - 1/4 கிலோ
புளி - சிறிய எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்.
 
செய்முறை:
 
மேல் தோலை நீக்கிவிட்டு கருணைக் கிழங்கைக் கழுவி அப்படியே முழுதாக அரிசி களைந்த நீரில் குக்கரில் வேகவைத்துக் ஆறியதும் கையால் நன்கு மசித்துக்  கொள்ளவும்.
 
புளியை நீர்க்கக் கரைத்து வடிகட்டிக் வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியில், எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், சீரகம், பொடியாக  நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, புளிநீரைச் சேர்க்கவும். மசித்த கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து மிதமான தீயில் சேர்ந்தாற்போல் வரும்வரை கொதிக்கவிடவும்.
 
குழம்புப் பதத்தில் இறக்கினால் பத்து நிமிடங்களில், கூட்டுக்கும் குழம்புக்கும் இடைப்பட்ட பதத்தில் இறுகிவிடும். மேலே கொத்தமல்லித் தழை தூவி பரிமாறலாம். சுவையான கருணைக் கிழங்கு மசியல் தயார்.


இதில் மேலும் படிக்கவும் :