கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?
கோடையின் கொடூர வெப்பத்திலிருந்து நம் உடலை சுகமாக வைத்திருக்க, பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கம்பங்கூழை அருந்துவது சிறந்த வழி. நம் முன்னோர்கள், கம்பு, கேப்பை போன்ற தானியங்களை கஞ்சி வடிவில் தயாரித்து, தினசரி உணவாகவே உட்கொண்டு வந்தனர்.
கோடையில் அதிகம் காணப்படும் உடல் சூடு, நீரிழிவு, செரிமான கோளாறுகள் போன்றவற்றுக்கு தீர்வாக, இயற்கையான கம்பங்கூழை குடிப்பது சிறந்தது. இளம் வயதினரிலிருந்து முதியவர்களுக்கு வரக்கூடிய சோர்வு, உடல் உஷ்ணம் ஆகியவற்றை இது தணிக்கக் கூடியது. இன்று பலரும் ரசாயன கலந்த குளிர்பானங்கள் பருகுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. அதற்கு பதிலாக, சாலையோர கடைகளில் கிடைக்கும் கம்பங்கூழை குடித்தால், இயற்கையாகவே உடல் உஷ்ணத்தை குறைக்கலாம்.
கம்பில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், புரதம், வைட்டமின் ஈ, பி உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலை நாளெங்கும் தெளிவாகச் செயல்பட செய்யும். தலைமுடி உதிர்வைக் குறைக்கவும், மலச்சிக்கலை போக்கவும் இது சிறந்தது. மேலும், உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இன்றைய சூழலில், ரசாயன கலந்த பானங்களை விட, நம் பாரம்பரிய உணவுகளையும், இயற்கை பானங்களையும் தேர்வு செய்வது நல்லது. கோடை வெப்பத்தை சமாளிக்க, கம்பங்கூழ், தர்பூசணி, பதநீர், நன்னாரி சர்பத், இயற்கை ஜூஸ்கள் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம், உடல் முழுவதும் புத்துணர்ச்சி ஏற்படும்.
Edited by Mahendran