நாளையே வாக்கெடுப்பு - ராஜினாமா செய்வாரா எடியூரப்பா?

Last Modified வெள்ளி, 18 மே 2018 (17:15 IST)
கர்நாடக முதல்வர் யார் என தேர்ந்தெடுக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளையே நடக்கவிருப்பது பாஜக தரப்பிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

 
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ்-மஜத கூட்டணியிடம் போதுமான எம்.எல்.ஏக்கள் இருந்தும், எடியூரப்பாவை முதல்வராக ஆளுநர் நியமித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ப்பட்டது. 
 
இந்த வழக்கு இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களிடம் போதுமான எம்.எல்.ஏக்கள் இருந்தும் பாஜகவை ஆட்சி அழைக்க அளித்தது தவறு என காங்கிரஸ் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த கேள்வியை நீதிபதியும் எழுப்பினார். ஆனால், எங்கள் பக்கமும் போதுமான எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள், காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்கள் சிலர் எங்களை ஆதரிக்க தயாராக இருக்கிறார்கள் என பாஜக வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தெரிவித்தார். 
 
அப்படியெனில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு நாங்கள் தயாரக இருக்கிறோம். எனவே, குதிரை பேரத்திற்கு வழி வகுக்காமல் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும். அதுவும், மெஜாரிட்டியை நிரூபிக்கும் வாய்ப்பை காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கே முதலில் கொடுக்க வேண்டும். வாக்கெடுப்பை வீடியோ எடுக்க வேண்டும் என காங்கிரஸ்-மஜத வழக்கறிஞர் அபிஷேக்மனு சிங்வி வாதாடினார்.  
 
ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை நாளை நடத்த உத்தரவிடக்கூடாது என பாஜக வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கூறினார். ஆனால், அதை  நிராகரித்த நீதிபதி, நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச உத்தரவிட்டார். மேலும், அதுவரை காங்கிரஸ்-மஜத எம்.எல்.ஏக்களுக்கு உரிய பாதுகாப்பை டிஜிபி அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர்.
 
எடியூரப்பாவிற்கு 15 நாட்கள் கால அவகாசத்தை ஆளுநர் கொடுத்திருந்தார். எனவே, காங்கிரஸ், மஜத அல்லது சுயேட்சை எம்.எல்.ஏக்களில் சிலரிடம் குதிரை பேரம் நடத்தி தங்கள் பக்கம் இழுத்து பாஜக ஆட்சி அமைக்கும் என்ற கருத்து நிலவியது. தற்போது நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் குதிரை பேரம் நடத்த பாஜக-விற்கு நேரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எடியூரப்பாவால் முதல்வராக நீடிக்க முடியாது. காங்கிரஸ்-மஜத கூட்டணியே வெற்றி பெறும். எனவே, இதை கருத்தில் கொண்டு முதல்வர் பதவியே எடியூரப்பா ராஜினாமா செய்ய வாய்ப்பிருக்கிறது என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :