வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (12:36 IST)

'கோலமாவு கோகிலா' திரைவிமர்சனம்

நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இன்று வெளியாகியிருக்கும் 'கோலமாவு கோகிலா' படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
 
மசாஜ் செண்டரில் ரூ.22 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்து தனது குடும்பத்தை காப்பாற்றி கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு திடீரென அம்மாவின் ஆபரேசனுக்காக ரூ.20 லட்சம் தேவைப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்வது? என்று நயன்தாரா அதிர்ச்சியில் உறைந்திருக்கும் நிலையில் அவருக்கு தற்செயலாக போதைப்பவுடர் கடத்தும் கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்துகிறது. அம்மாவை காப்பாற்ற போதைப்பொருள் கடத்தும் நயன்தாரா, எதிர்பாராத வகையில் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அந்த சிக்கலால் அவருடைய குடும்பத்தினர் உயிருக்கே ஆபத்து வரும் சூழ்நிலையில் இந்த சிக்கலில் இருந்து நயன்தாரா மீண்டாரா? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை
 
நயன்தாரா இதுவரை நடித்த கேரக்டர்களிலேயே இதுதான் சிறப்பான கேரக்டர் என்று கூறினால் அது மிகையாகாது. அப்பாவி முகத்தை வைத்து கொண்டு இந்த பூனையும் பால் குடிக்குமா? என்ற வகையில் கோகைன் கடத்துவது, கொலை செய்வது, இந்தியாவையே ஆட்டிப்படைக்கும் வில்லனை மிரட்டுவது என அபாரமாக நடித்துள்ளார். இன்னொருத்தரையும் கொலை செய்தால் தான் இந்த இடத்தை விட்டு போவேன் என்று வில்லனிடம் அடம்பிடிப்பது, கிளைமாக்ஸில் தன்னை பிடிக்க வந்த போலீஸ் அதிகாரி சரவணனுக்கே அல்வா கொடுப்பது போன்ற காட்சிகளில் நயன்தாரா முகத்தில் காணும் எகத்தாளம் எந்த நடிகையாலும் கொண்டு வரமுடியாது.
 
யோகிபாபு இந்த படத்தில் கிட்டத்தட்ட ஹீரோ கேரக்டரில் நடித்துள்ளார். நயன்தாராவை விரட்டி விரட்டி லவ் செய்வது, அவருக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னால் நிற்பது, ஆனால் அதே நேரம் நயன்தாரா ஒரு போதைப்பொருள் கடத்தும் கும்பல் என தெரிந்ததும் பின்வாங்குவது என படம் முழுவதும் காமெடி ராஜ்யம் நடத்தியுள்ளார் யோகிபாபு
 
சரண்யா பொன்வண்ணனும், ஜாக்குலினும் சேர்ந்து நடத்தும் காமெடி கலாட்டாவுக்கு அளவே இல்லை. இவர்களுடன் ஜாக்குலினை காதலிக்கும் அன்புதாசனும் சேர்ந்து கொள்ள பார்வையாளர்களுக்கு சிரித்து சிரித்து வயிரே புண்ணாகிவிட்டது. ஆர்.எஸ்.சிவாஜி, சரவணன், மொட்டை ராஜேந்திரன் என சின்ன சின்ன கேரக்டர்களை கூட சரியாக பயன்படுத்தியுள்ளார் இயக்குனர் நெல்சன்
 
அனிருத்தின் பாடல்கள் குறித்து விமர்சனம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. 'கல்யாண வயசு' பாடல் உள்பட அனைத்து பாடல்களும் ஏற்கனவே சூப்பர்ஹிட். படத்தில் படமாக்கப்பட்ட விதமும் சூப்பர். பின்னணி இசையில் அனிருத் கலக்கிவிட்டார் என்றுதான் கூறவேண்டும்
 
இயக்குனர் நெல்சன் இந்த படத்தின் கதையை காமெடியாக சொல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதால் ஆரம்பத்தில் இருந்தே அவர் லாஜிக் குறித்து அவர் கவலைப்படவில்லை. சொல்ல வந்த விஷயத்தை பிசிறு தட்டாமல், அதுவும் ஒரு சீரியஸான ஹீரோயினை வைத்து முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தை திருப்தியுடன் தந்துவிட்டார். இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடி படம் என்று இந்த படத்தை கூறினால் அது மிகையாகாது. குறிப்பாக படத்தில் இடம்பெறும் அந்த பத்து நிமிட வேன் காட்சிக்கு சிரிக்காமல் யாராவது இருந்தால் அவர்களுடைய மனநிலையை சந்தேகப்பட வைக்கும்.
 
மொத்தத்தில் ஒரு இரண்டரை மணி நேரம் ஜாலியாக சிரிக்க விரும்புவர்கள் இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். 
 
ரெட்டிங்: 3.75/5