சூட்கேஸில் கஞ்சா கடத்தும் ரியல் கோலமாவு கோகிலா....

Last Modified செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (13:41 IST)
பல வருடங்களாக ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த ரேணுகா என்கிற இளம்பெண்ணை தமிழக போலீசார் நேற்று கைது செய்தனர்.

 
சென்னையை அடுத்து போரூர் சிக்னல் அருகே ஆட்டோவில் சூட்கேஸுடன் வந்து இறங்கிய பெண் ஒருவரிடம், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சூட்கேஸை பறிக்க முயற்சி செய்தபோது பொதுமக்கள் கூடியதால், இரும்பு வளையம் மூலம் அப்பெண்ணின் முகத்தை தாக்கி விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
 
அப்பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரது சூட்கேஸில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த ரேணுகா என்கிற அந்த பெண் ஏற்கனவே இருமுறை கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர். சிறையில் செம்மஞ்சேரியை சேர்ந்த கஞ்சா வியாபாரியான முத்துலட்சுமி என்கிற பெண்ணுடன் ஏற்பட்ட நட்பில் அவருடன் பெரும்பாக்கத்தில் அவர் தங்கியுள்ளார்.
 
அதன்பின், அதேபகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரியான தேவசகாயத்தை ரேணுகா திருமணம் செய்துள்ளார். ஆனால், அவர்களுக்கு குழந்தை இல்லை. ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி சென்னைக்கு கொண்டு வர கணவருக்கு உறுதுணையாக ரேணுகா இருந்துள்ளார். அப்போது, நிர்மல்குமார் என்கிற வாலிபரோடு ரேணுகாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், கோபமடைந்த தேவசகாயம், ரேணுகாவை வீட்டை விட்டு விரட்டிவிட்டார். அதன் பின் நிர்மலுடன் சேர்ந்து ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் விற்றுள்ளார். 
 
அப்போதுதான் கடந்த 4ம் தேதி அவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். அவர் நிர்மலுடன் சேர்ந்து கஞ்சா வியாபாரம் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாத அவரின் கணவர் தேவசகாயம் ஆட்களை அனுப்பி ரேணுகாவுடன் பிரச்சனை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
 
விரைவில் திறைக்கு வரவுள்ள கோலமாவு கோகிலா திரைப்படத்தில் கஞ்சா கடத்தும் பெண்ணாக நயன்தாரா நடித்துள்ளார். சென்னையில் கஞ்சா கடத்தும் கும்பல் அதை ‘கோலமாவு’ என்றே ரகசிய பெயரில் அழைப்பது வழக்கம். இந்த நிலையில்தான் ரியல் கோலமாவு கோகிலாவான ரேணுகா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :