‘அப்பாவைப் பற்றித் தவறாகக் காட்டியிருக்கின்றனர்’ என ஜெமினி கணேசன் மகள் கமலா செல்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸாகியுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.
இந்நிலையில், ‘இந்தப் படத்தில் அப்பாவைப் பற்றித் தவறாகக் காட்டியிருக்கின்றனர்’ என ஜெமினி கணேசன் மகளும், மருத்துவருமான கமலா செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
“இந்தப் படத்தில் சாவித்ரியின் பக்கத்தை மட்டுமே காண்பித்திருக்கிறார்கள். அப்பாவைப் பற்றி எங்களிடம் எந்த விவரங்களையும் கேட்காமல், தவறாகக் காட்டியிருக்கின்றனர். அப்பா தான் சாவித்ரியின் பின்னால் சுற்றினார் என்றும், அவர் தான் சாவித்ரிக்கு குடிக்க கற்றுக் கொடுத்தார் என்றும் படத்தில் இடம்பெற்றுள்ளது.
இது, அப்பாவை மட்டும் மட்டம் தட்டி, சாவித்ரியை உயர்த்திப் பிடிப்பதாக அமைந்துள்ளது. அப்பா தான் குடியைக் கற்றுக் கொடுத்தார் என்றால், எங்கள் அம்மாவையும் குடிகாரியாய் ஆக்கியிருப்பாரே… ஆனால், அவர் அப்படி கிடையாது” எனக் குற்றம் சாட்டியுள்ளார் கமலா செல்வராஜ்.