செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (17:19 IST)

பார்ட்டி படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா? தயாரிப்பாளர் டி சிவா விளக்கம்!

பார்ட்டி படம் ஓடிடியில் ரிலிஸ் ஆவதாக வரும் செய்தி உண்மையில்லை என தயாரிப்பாளர் டி சிவா தெரிவித்துள்ளார்.

சென்னை 28 படத்தின் 2-ம் பாகத்துக்குப் பின்னர் வெங்கட்பிரபு இயக்கிய படம் பார்ட்டி. இதில் சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா  கிருஷ்ணன், ஜெய், சிவா, ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு பார்ட்டிக்காகக்  களமிறங்கியிருக்கிறார் வெங்கட்பிரபு. படத்தின் டீசர் சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளியானது. ஆனால் அதன் பிறகு படத்தைப் பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லை.

அதனால் வெங்கட் பிரபுவும் மாநாடு படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் இப்போது பார்ட்டி படம் ஏன் இன்னும் வெளியாகவில்லை என்பது குறித்து பேசியுள்ளார். அதில் ‘பார்ட்டி' படம் வெளியாகாமல் இருப்பது  மிகப்பெரிய ஏமாற்றம். படப்பிடிப்பு நடத்த கஷ்டமான இடங்களில் குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்தோம். ஆனால், இன்னும் தணிக்கையைக் கூட படம் தாண்டவில்லை. படத்தின் பட்ஜெட் பெரியது என்பது ஓடிடி பிளாட்பார்ம்களில் வெளியிட முடியவில்லை.  ஆனால், விரைவில் பிரச்சினைகள் தீரும் என்று நம்புகிறேன்’ எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் பார்ட்டி திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அது சம்மந்தமாக தயாரிப்பாளர் டி சிவா தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். எங்களுடைய அடுத்த படமான 'பார்ட்டி' திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியாகிறது என்ற செய்தி பல்வேறு ஊடகங்களில் வெளியானது எங்கள் கவனத்துக்கு வந்தது. எங்களிடம் அப்படி எந்தத் திட்டமும் இல்லையென்பதால் இதுபோன்ற வதந்திகளை நாங்கள் மறுக்கிறோம். இதற்காக எங்கள் வலியையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறோம்.

சரியான நேரத்தில் திரைப்பட வெளியீடு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என்பதை அனைவரிடமும் தெரிவிக்க விரும்புகிறோம். எனவே, எந்தவித போலிச் செய்தியையும் பரப்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். திரையரங்க வெளியீட்டுக்குக் காத்திருக்கிறோம்.