பிரபல நடிகருக்கு விவேக் செய்த உதவி; ஷேர் செய்த ரசிகர்
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் விவேக். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைப்பவர். நடிகர் விவேக் மறைந்த கலாம் அவர்களின் கொள்கையை எடுத்து அதை செயல்படுத்தியும் வருகிறார்.
சினிமாவில் மட்டும் சமூக பிரச்சனைகளை பற்றி பேசி வந்த அவர் தற்போது டிவிட்டர் மூலம் தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் விவேக் அவர்கள் மறைந்த நடிகர் குமரிமுத்துவின் மகளுக்கு செய்த உதவி பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகர் குமரிமுத்து, விவேக்கிடம் சென்று இலங்கையில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது, அதில் நீங்கள் கலந்து கொண்டால் எனக்கு ரூ. 40,000 கிடைக்கும், அந்த பணத்தை வைத்து என் மகளுக்கு திருமணம் நடத்த உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் உங்களுக்கு சில லட்சங்கள் சம்பளம் தருவார்கள் எனக் கூறியுள்ளார். நிகழ்ச்சி முடிந்ததும், விவேக் தனக்கு பேசிய பணம் முழுவதையும் குமரிமுத்துவிடமே கொடுத்து இதையும் வைத்து உங்களது மகள் திருமணத்தை நடத்துங்கள் என்று தெரிவித்திருக்கிறார். விவேக் அவர்களின் இந்த செயலை கண்டு ஆனந்த கண்ணீர் விட்டாராம் குமரிமுத்து.
இந்த தகவலை ரசிகர் ஒருவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதனை விவேக் அவர்களே தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இந்த நல்ல உள்ளம் வாழ்க என நாமும் வாழ்த்துவோம்.