செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 5 மார்ச் 2018 (11:45 IST)

ஜெ.வின் சமாதியில் காவலர் தற்கொலை - பின்னணி என்ன?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் இளம் காவலர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழக காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
ஜெ.வின் சமாதியில் பாதுகாப்பு பணியில் இருந்த மதுரையை சேர்ந்த அருண்ராஜ் என்ற இளம் காவல் அதிகாரி, நேற்று அதிகாலை திடீரென அவர் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மெரினா முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தை பார்வையிட்ட சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.
 
இந்நிலையில், அருண்ராஜின் குடும்பத்தினர் அவரை திருமணத்திற்கு வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
 
அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் நடத்திய விசாரணையில், அருண்ராஜ் ஒரு சிவபக்தர் என்பதும், அவர் மனக்குழப்பம் இல்லாதவர் என்பதும் தெரிய வந்தது. அவரது குடும்பத்தினர் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கடந்த 2016ம் ஆண்டு அவர் 20 நாட்கள் காணாமல் போய்விட்டர். அதன் பின், திருவண்ணாமலை கிரிவலப் பகுதியில் காவி உடையில் இருந்த அவரை போலீசார் மிட்டு அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
 
எனவே, ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அவருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம். தற்போது, மீண்டும் அவரின் குடும்பத்தினர் திருமணத்திற்கு வற்புறுத்த அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.